செய்திகள்
மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம்

ஐதராபாத் என்கவுன்ட்டரில் உண்மைத்தன்மையை பற்றி விசாரிக்க வேண்டும்: ப.சிதம்பரம்

Published On 2019-12-06 09:29 GMT   |   Update On 2019-12-06 10:10 GMT
ஐதராபாத் பெண் டாக்டர் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் 4 குற்றவாளிகள் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்:

ஐதராபாத்தின் புறநகரான சாம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்த 27 வயது கால்நடை பெண் டாக்டர் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கை விசாரித்து வரும் சைபராபாத் பகுதி போலீசார் இன்று அதிகாலை 3 மணிக்கு குற்றவாளிகள் 4 பேரையும் பெண் டாக்டரை எரித்துக் கொன்ற ஐதராபாத்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அழைத்து சென்றனர்.

எரிந்த பிரேதம் மீட்கப்பட்ட பாலத்தின் அருகே சென்றபோது அவர்கள் எப்படி கொலை செய்தார்கள்? என்பதை குற்றவாளிகள் நடித்து காட்டினார்கள். அப்போது 4 பேரும் திடீரென போலீசாரின் ஆயுதங்களை பறித்தும், கற்களால் தாக்கியும் தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் குற்றவாளிகள் 4 பேரையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.



இந்நிலையில், சமீபத்தில் திகார் சிறையில் இருந்து விடுதலையான மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

'நான் டெல்லியில் இருந்து ராஞ்சிக்கு வரும் வேளையில் இன்று அதிகாலை சுமார் 3.30 - 4.00 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவத்தில் (பத்திரிகையாளர்கள்) உங்களுக்கு தெரிந்த அளவுக்கு மட்டுமே எனக்கும் தெரியும். உண்மை நிலவரம் பற்றி எனக்கு அதிகமாக தெரியாது.
இதில் உள்ள உண்மைத்தன்மையை பற்றி விரிவாக விசாரிக்கப்பட வேண்டும்’ என தொடர்பாக ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஐதராபாத் போலீசார் இன்று நடத்திய என்கவுன்ட்டர் தொடர்பாக தாமே முன்வந்து விசாரணை செய்வதற்கு முன்வந்துள்ள தேசிய மனித உரிமை ஆணையம் சம்பவ இடத்துக்கு ‘உண்மை கண்டறியும் குழுவை’ உடனடியாக அனுப்பி வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

’கற்பழிப்பு குற்றவாளிகளிடம் கருணை காட்டக் கூடாது’ என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News