செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

வைரலாகும் பகீர் வீடியோ - இது அங்கு எடுக்கப்படவில்லை

Published On 2019-12-05 06:37 GMT   |   Update On 2019-12-05 06:37 GMT
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ ஒன்று துபாயில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் உண்மை பின்னணியை பார்ப்போம்.



ஏமன் நாட்டில் பொதுமக்கள் முன்னிலையில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. மேலும் இந்த வீடியோ துபாயில் எடுக்கப்பட்டதாக வைரல் வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. துபாயிலும் இதுபோன்ற தண்டனை முறை அமலில் இருப்பதால், சமூக வலைத்தள வாசிகள் இதனை உண்மையென நம்புகின்றனர்.

சில தினங்களுக்கு முன் நாட்டையே பரபரப்பில் ஆழ்த்திய ஐதராபாத் பாலியல் சம்பவத்தை தொடர்ந்து வைரல் வீடியோவில் உள்ளது போன்ற தண்டனை முறை இந்தியாவிலும் கொண்டுவரப்பட வேண்டும் என சமூக வலைத்தள வாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வைரல் வீடியோவில் பாலியல் குற்ற சம்பவத்தை நிகழ்த்திய நபர், பொதுவெளியில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் இதுபோன்ற தண்டனைகளுக்கு பெயர்பெற்ற துபாயில் தான் சமீபத்திய வீடியோவும் எடுக்கப்பட்டதாக சமூக வலைத்தள வாசிகள் கருதுகின்றனர்.



உண்மையில் இதுபற்றிய தேடல்களில் ஏமன் நாட்டு தலைநகரான சனாவில் இந்த சம்பவம் நிகழ்த்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதே சம்பவம் பற்றிய ஸ்கிரீன்ஷாட்கள் ஜூலை 2017-ல் பதிவேற்றம் செய்யப்பட்ட மலாய் செய்தியில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதுபற்றிய வேறு தகவல்களில் குற்றம் சம்பவம் நடைபெற்ற 15 நிமிடங்களில் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில் வைரல் வீடியோ துபாயில் எடுக்கப்படவில்லை என உறுதியாகியுள்ளது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

Tags:    

Similar News