செய்திகள்
கோப்புப்படம்

கர்நாடகத்தில் இடைத்தேர்தல்- 15 தொகுதிகளுக்கு நாளை ஓட்டுப்பதிவு

Published On 2019-12-04 08:59 GMT   |   Update On 2019-12-04 08:59 GMT
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நாளை (5-ந்தேதி) நடைபெறுகிறது.
பெங்களூரு:

கர்நாடகத்தில் மதசார்பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

17 பேரின் ராஜினாமா கடிதங்களை அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்கவில்லை. 17 எம்.எல்.ஏ.க்களையும் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதன் காரணமாக மதசார்பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17பேரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் தங்களது உத்தரவில் 17 பேரின் தகுதிநீக்கம் செல்லும் என்றும், அவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடை இல்லை என்றும் அறிவித்தனர்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நாளை (5-ந்தேதி) நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி நாளை தேர்தல் நடக்கிறது.

இந்த 15 தொகுதிகளிலும் 165 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் 9 பேர் பெண்கள் ஆவார்கள். 15 தொகுதிகளிலும் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள் மொத்தம் 37லட்சத்து 77ஆயிரத்து 970 வாக்காளர்கள் ஆவர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 19 லட்சத்து 25ஆயிரத்து 529பேரும், பெண் வாக்காளர்கள் 18 லட்சத்து 52 ஆயிரத்து 27 பேரும், திருநங்கைகள் 414 பேரும் உள்ளனர்.

நாளை காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணிவரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. ஓட்டுப் பதிவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் 13 பேருக்கு பா.ஜனதா சார்பில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த இடைத்தேர்தல் முடிவுகள் மாநில பா.ஜனதா அரசின் எதிர்காலத்தை நிர்ணயிக்க உள்ளதால் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தேர்தலில் 6 முதல் 8 தொகுதிகள் வரை வென்றால்தான் ஆட்சியை தக்கவைக்க முடியும் என்பதால் எடியூரப்பா அனைத்து தொகுதிகளிலும் 2 கட்டமாக பிரசாரம் செய்தார்.

இதற்கிடையே தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் இடைத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால் அவர்களுக்கு அளித்த வாக்குறுதிபடி தங்களுக்கு மந்திரி பதவி வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பா.ஜனதா 8 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்த பிறகு மந்திரி பதவிகளை கேட்டு முதல்வர் எடியூரப்பாவுக்கு நெருக்கடி கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

எனவே இடைத்தேர்தல் கண்டத்தில் இருந்து எடியூரப்பா தப்பினாலும் அடுத்து மந்திரி பதவி பிரச்சனையை சமாளிக்க வேண்டிய சிக்கல் உருவாகி இருக்கிறது.

இந்த நிலையில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர்க்கப்பட்டு வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டதால் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சிலர் அதிருப்தியில் உள்ளனர்.

இதில் 10 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர்கள் தங்களுக்கு கட்சியில் நல்ல எதிர் காலம் இல்லை என்று கூறி எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

இந்த தேர்தல் முடிவு பா.ஜனதாவுக்கு எதிராக வந்தால் மீண்டும் மதசார்பற்ற ஜனதாதளத்துடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கப்போவதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜூனா கார்கே அறிவித்திருந்தார்.

அவரது கருத்தை வரவேற்று கூட்டணி ஆட்சி குறித்து பரிசீலிக்கப்போவதாக மதசார்பற்ற ஜனதாதள தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான குமாரசாமி அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News