செய்திகள்
பங்கஜா முண்டே

பங்கஜா முண்டே பா.ஜனதாவில் இருந்து வெளியேற திட்டமா?

Published On 2019-12-03 02:03 GMT   |   Update On 2019-12-03 02:03 GMT
பாரதீய ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி பங்கஜா முண்டே தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து கட்சி பெயரை அதிரடியாக நீக்கினார். இதனால் அவர் கட்சியில் இருந்து வெளியேறுகிறாரா என பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
மும்பை :

மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான முந்தைய பாரதீய ஜனதா கூட்டணி அரசில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரியாக பதவி வகித்த மறைந்த முன்னாள் மத்திய மந்திரி கோபிநாத் முண்டேயின் மகள் பங்ஜா முண்டே நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பார்லி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தனது ஒன்றுவிட்ட சகோதரர் தனஞ்செய் முண்டேயிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். தனது தேர்தல் தோல்வி தொடர்பாக அவர் கட்சியின் மூத்த தலைவர்கள் மீது அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இருப்பினும் தொடர்ந்து அவர் கட்சி கூட்டங்களில் பங்கேற்று வந்தார்.

இந்தநிலையில், பங்கஜா முண்டே திடீரென தனது முகநூல் பக்கத்தில் ‘எதிர்கால பயணம்' என பதிவு ஒன்றை வெளியிட்டு, அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப எதிர்காலத்தை முடிவு செய்வேன் என தெரிவித்து இருந்தார்.



வருகிற 12-ந் தேதி கோபிநாத்கட் பகுதியில் நடைபெறும் தனது தந்தை கோபிநாத் முண்டேயின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தொண்டர்களுக்கும் அழைப்பு விடுத்து இருந்தார்.

மேலும் அவர் டுவிட்டரில் புதிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

இதனால் பங்கஜா முண்டே கட்சி தாவுகிறாரா? என பரபரப்பு உண்டாகி உள்ளது. இந்த நிலையில், நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து தனது கட்சியின் பெயரான ‘பாரதீய ஜனதா’ என்ற வார்த்தையை அதிரடியாக நீக்கினார்.

மாநில ஆட்சியை சிவசேனாவிடம் பறிகொடுத்த நிலையில், பங்கஜா முண்டேயின் இந்த நடவடிக்கை பாரதீய ஜனதாவில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News