செய்திகள்
கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கெரா

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை அரசு ஊக்குவிக்கிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு

Published On 2019-12-01 20:22 GMT   |   Update On 2019-12-01 20:22 GMT
பொதுத்துறை நிறுவனங்களின் பணத்தில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை மத்திய அரசு ஊக்குவிப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
புதுடெல்லி:

பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் தொடர்ந்து ந‌‌ஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இதனால் இந்த நிறுவனங்களில் பல்வேறு செலவின குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டம் உள்ளிட்ட நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.

பொதுத்துறை நிறுவனங்களான இவற்றின் வீழ்ச்சி தொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கெரா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலங்களில் லாபத்தை கொடுத்து வந்தன. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் மற்றும் 2-ம் ஆட்சியின் போது இந்த நிறுவனங்கள் ரூ.7 ஆயிரம் கோடிக்கு மேல் லாபம் ஈட்டின.

ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இவை மிகப்பெரும் வீழ்ச்சியை அடைந்து வருகின்றன. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை மத்திய அரசு ஊக்குவித்து வரும் இந்த காலகட்டத்தில் பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். நிறுவனங்கள் ரூ.11 ஆயிரம் கோடி ந‌‌ஷ்டத்தில் இயங்கி வருகின்றன.

இந்த நிறுவனங்களை நீங்கள் (மத்திய அரசு) வேண்டுமென்றே படுகுழிக்குள் தள்ளிவிட்டீர்கள். பொதுத்துறை நிறுவனங்களின் பணத்தில் தனியார் நிறுவனங்களை ஊக்குவித்து வருகிறீர்கள். இவ்வாறு தனியார் துறைகளுக்கு சிறப்பு கவனிப்பு வழங்கும் நீங்கள், பொதுத்துறை நிறுவனங்களிடம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வது ஏன்? இதற்காக தனியார் நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் பத்திரங்கள் அடிப்படையில் பலனடைந்தீர்களா? என பிரதமர் மோடியை கேட்க விரும்புகிறேன்.

‘லாபம் ஈட்டும் ஒரு நிறுவனம் இருந்தால் அதன் லாபத்தை குறைக்க முயற்சிக்க வேண்டும், முடியாவிட்டால் அதை விற்க வேண்டும்’ இதுவே பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்பான அரசின் கொள்கையாக இருக்கிறது.

இவ்வாறு பவன் கெரா கூறினார்.
Tags:    

Similar News