செய்திகள்
ராணுவ மந்திரிகள் ஆலோசனை

ஜப்பான் - இந்தியா வெளியுறவுத்துறை, ராணுவ மந்திரிகள் உயர்மட்ட ஆலோசனை

Published On 2019-11-30 13:02 GMT   |   Update On 2019-11-30 13:02 GMT
ஜப்பான், இந்தியா நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை மற்றும் ராணுவ மந்திரிகளின் பங்கேற்ற முதலாவது உயர்மட்ட ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.
புதுடெல்லி:

இந்தியா-ஜப்பான் 13-வது ஆண்டு உச்சி மாநாடு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜப்பானில் நடைபெற்றது.

இந்த மாநாட்டின்போது ஜப்பான் - இந்தியா பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே முன்னிலையில் முடிவு செய்யப்பட்டது.

அவ்வகையில், ஜப்பான், இந்தியா நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை மற்றும் ராணுவ மந்திரிகளின் முதல் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் ஜப்பான் ராணுவ மந்திரி டாரோ கோனோ, அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி டோஷிமிட்சு மோட்டேகி மற்றும் இருநாடுகளின் ராணுவம் மற்றும் வெளியுறவுத்துறையை சேர்ந்த உயரதிகாரிகள் பங்கேற்றனர்.



இந்தோ-பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலைநாட்டுவது, இருநாடுகளின் கப்பற்படைகளுக்கு இடையில் ஒருங்கிணைப்பை உருவாக்குவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இன்றைய ஆலோசனையின்போது விவாதிக்கப்பட்டது.

முன்னதாக, ஜப்பான் ராணுவ மந்திரி டாரோ கோனோ ஹின்டான் பகுதியில் உள்ள இந்திய விமானப்படை தளத்தை பார்வையிட்டார். இந்திய விமானப்படையில் உள்ள போர் விமானங்கள் எண்ணிக்கை மற்றும் அவற்றின் செயலாற்றல் தொடர்பாக விமானப்படை அதிகாரிகள் அவரிடம் விளக்கி கூறினர்.

Tags:    

Similar News