செய்திகள்
மத்திய அரசு

ஐ.சி.எப். தொழிற்சாலையை மூடும் கேள்விக்கே இடமில்லை - மத்திய அரசு தகவல்

Published On 2019-11-30 00:09 GMT   |   Update On 2019-11-30 00:09 GMT
சென்னையில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலையை (ஐ.சி.எப்.) மூடும் கேள்விக்கே இடமில்லை என மத்திய அரசு கூறியுள்ளது.
புதுடெல்லி:

மத்திய அரசுக்கு சொந்தமான ரெயில் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எப்.) சென்னை பெரம்பூரில் இயங்கி வருகிறது. இங்கிருந்து இந்திய ரெயில்வேக்கு நவீன ரெயில் பெட்டிகள் தயாரித்து அனுப்பப்படுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன் பயணத்தை தொடங்கிய ‘வந்தே பாரத்’ அதிவேக ரெயிலும் சென்னை ஐ.சி.எப்.பின் தயாரிப்பு ஆகும்.

இந்த நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் ரெயில்வேத்துறை தொடர்பான கேள்விகளுக்கு ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் நேற்று பதிலளித்தார். அப்போது சென்னை ரெயில் பெட்டி தொழிற்சாலையை மூடும் திட்டம் எதுவும் உள்ளதா? என உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பியூஸ் கோயல் பதிலளிக்கையில், ‘சென்னை ஐ.சி.எப்.ஐ. மூடும் கேள்விக்கே இடமில்லை. சென்னை ஐ.சி.எப்-ன் சாதனைகளால் நாம் பெருமையடைகிறோம். இந்த தொழிற்சாலையின் என்ஜினீயர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் இணைந்து வந்தே பாரத் ரெயிலை உருவாக்கினர். இந்த நிறுவனம் கிரீடத்தில் உள்ள ஒரு நகை போன்றதாகும். இந்த நிறுவனத்தை நவீனப்படுத்தவும், விரிவாக்கவும், முன்னேற்றவுமே ஒவ்வொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகின்றன’ என்று தெரிவித்தார்.

புல்லட் ரெயில் திட்டம் குறித்து பியூஸ் கோயல் குறிப்பிடும்போது, ‘இந்தியாவில் புல்லட் ரெயில் இயக்கத்தை பொறுத்தவரை நாடு முழுவதும் பல்வேறு திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன. இது தொடர்பாக சரியான நேரத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டு, இந்த அவையில் தெரிவிக்கப்படும்’ என்று கூறினார்.

நாடு முழுவதும் ஒட்டுமொத்த ரெயில் நெட்வொர்க்கும் மின்மயமாக்கப்படும் என்று கூறிய பியூஸ் கோயல், உலகிலேயே டீசல் என்ஜின்களை மின்சார என்ஜின்களாக மாற்றும் சோதனை முயற்சியை மேற்கொள்ளும் ஒரே நாடாக இந்தியா திகழ்வதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘இதுவரை 6 டீசல் என்ஜின்கள் 3 இரட்டை மின்சார என்ஜின்களாக மாற்றப்பட்டு உள்ளன. இது ஒரு முன்மாதிரியாக விளங்குகிறது. டீசல் என்ஜினில் இருந்த ஏராளமான கருவிகள் திரும்ப பயன்படுத்தப்பட்டு உள்ளன. டீசல் என்ஜின்களை மின்சார என்ஜின்களாக மாற்றுவதற்கு ஆகும் செலவினம் குறித்து தற்போது சரியாக கூற முடியாது’ என்று குறிப்பிட்டார்.

மின்சார என்ஜின்களாக மாற்றப்பட்ட முன்மாதிரி என்ஜின்களின் சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று வருவதாக கூறிய பியூஸ் கோயல், அவற்றின் செயல்பாட்டை பொறுத்தே மேலும் உள்ள டீசல் என்ஜின்களை மின்சார என்ஜின்களாக மாற்றுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Tags:    

Similar News