செய்திகள்
பிரதமர் மோடி மற்றும் நிதிமந்திரி நிர்மலா சீதாராமன்

6 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி - அதல பாதாளத்தில் இந்திய பொருளாதாரம்

Published On 2019-11-29 14:09 GMT   |   Update On 2019-11-29 14:09 GMT
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு கால ஆண்டில் 4.5 சதவீதமாக சரிந்துள்ளது என மத்திய புள்ளியியல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான நடப்பு நிதியாண்டுக்கான இரண்டாம் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான கணக்கெடுப்பு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டது. அதில் நடப்பு நிதி ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பெரும் சரிவை சந்தித்துள்ளது.

முன்னதாக 2019-ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் 5 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி தற்போது 4.5 சதவீதம் என்ற அளவில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதே இரண்டாம் காலாண்டில் கடந்த வருடம் (2018-ம் ஆண்டு) பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம் என்ற அளவில் இருந்தது.

தற்போது இந்திய பொருளாதாரம் கண்டுள்ள வீழ்ச்சி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. 

இதற்கு முன்னதாக கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் பொருளாதாரம் வளர்ச்சி என்பது 4.3 என்ற சதவீதத்தில் இருந்தது.

கடந்த காலாண்டு போல் இல்லாமல் தீபாவளி போன்ற பண்டிகை காலம் நிறைந்த இந்த காலாண்டில் மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து நாட்டின் பொருளாதாரம் சீரடையும் என வல்லுநர்கள் எதிர்பார்த்திருந்தனர். 



ஆனால், பொருளாதாரம் மிகவும் மந்த நிலைக்கு சென்று அதன் வளர்ச்சி விகிதம் 4.5 சதவீதம் என்ற அளவில் மேலும் சரிந்துள்ளதால் வேலைவாய்ப்பின்மை, தொழில் வளர்ச்சியின்மை போன்ற பல்வேறு இன்னல்களை நாடு சந்திக்க நேரிடும் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில், மாநிலங்களவையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தில் பேசிய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன், 'நாட்டில் பொருளாதார வளர்ச்சி என்பது ஏறும், இறங்கும். ஆனால் பொருளாதார மந்தநிலை இப்போதல்ல, எப்போதுமே ஏற்படாது’ என தெரிவித்தார்.

நிதிமந்திரி நிர்மலா சீதாரமன் தெரிவித்த கருத்துக்கு நேர் எதிராக தற்போது வெளியாகியுள்ள பொருளாதார வளர்ச்சி விகிதம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான நிலைக்கு சென்றிருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News