செய்திகள்
மத்திய சட்டம், தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 79 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வுக்கு மனு - மத்திய அரசு தகவல்

Published On 2019-11-28 22:26 GMT   |   Update On 2019-11-28 22:26 GMT
பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 79 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வு பெற மனு அளித்திருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.
புதுடெல்லி:

நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பி.எஸ்.என்.எல். நிறுவனம் தொடர்ந்து நலிவடைந்து வருகிறது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் எழுச்சியால், பி.எஸ்.என்.எல். நிறுவனம் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் மேம்பாடு குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய தொலைத்தொடர்பு மந்திரி ரவிசங்கர் பிரசாத் நேற்று எழுத்து மூலம் பதிலளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்கள் இந்தியாவின் முக்கியமான சொத்துக்கள் ஆகும். நிலநடுக்கம், புயல் மற்றும் ராணுவ நடவடிக்கைகளின் போது நாட்டின் குடிமக்களுக்கு அவர்கள் தீவிரமாக உதவி செய்கின்றனர். எனவே இந்த நிறுவனங்களை புதுப்பிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். அவற்றை புதுப்பித்து தொழில்முறை நிறுவனமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பி.எஸ்.என்.எல். துறையை ஒப்பிடும்போது, அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கான செலவு அதிகமாக உள்ளது. குறிப்பாக பி.எஸ்.என்.எல்.லில் ஊழியர் செலவு 75.06 சதவீதமாகவும், எம்.டி.என்.எல்.லில் ஊழியர் செலவுகள் 87.15 சதவீதமாகவும் உள்ளது. இது ஏர்டெல், வோடபோன், ஜியோவில் முறையே 2.96, 5.59, 4.27 சதவீதமாகவே உள்ளது.

எனவே இந்த செலவினத்தை குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்த கடந்த அக்டோபர் 23-ந்தேதி நடந்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி 50 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 4-ந்தேதி முதல் தொடங்கப்பட்டு இருக்கும் இந்த திட்டம் வருகிற 3-ந்தேதி வரை அமலில் இருக்கும்.

இதில் தற்போது வரை பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 79 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர். இதைப்போல மொத்தமுள்ள 20 ஆயிரம் எம்.டி.என்.எல். ஊழியர்களில் 14 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வு பெற முன்வந்துள்ளனர். இவர்கள் சிறப்பான பணப்பலன்கள் பெறுவதை நாங்கள் உறுதி செய்வோம்.

இதைப்போல மோசமான நிதி நிலைமையால் பி.எஸ்.என்.எல். நிறுவனம் தத்தளித்து வரும் நிலையில், பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் முடிவு செய்துள்ளோம். அதேநேரம் பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் போட்டிபோடும் வகையில் பி.எஸ்.என்.எல்.லுக்கு 4ஜி சேவை வழங்கப்பட்டு உள்ளது. பிற நிறுவனங்களுடன் போட்டிபோடும் வகையில் நாங்கள் கூடுதலாக ஒரு மைல் கூட நடப்போம்.

இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
Tags:    

Similar News