செய்திகள்
தடை செய்யப்பட்ட இ-சிகரெட்

மக்களவையில் இ-சிகரெட் தடை மசோதா நிறைவேறியது

Published On 2019-11-27 20:11 GMT   |   Update On 2019-11-27 20:11 GMT
எலக்ட்ரானிக் சிகரெட் எனப்படும் இ-சிகரெட்டுகளை தடை செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேறியது.
புதுடெல்லி:

எலக்ட்ரானிக் சிகரெட் எனப்படும் இ-சிகரெட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்தை மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் பிறப்பித்தது. இதற்கு பதிலாக புதிய சட்டம் இயற்றும் வகையில் இ-சிகரெட் தடை மசோதா ஒன்று பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

‘எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் தடை (தயாரிப்பு, உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து, விற்பனை, வினியோகம், சேமிப்பு மற்றும் விளம்பரப்படுத்துதல்) மசோதா’ எனப்படும் இந்த மசோதா மீது நேற்று விவாதம் நடந்தது. இந்த விவாதங்களுக்கு சுகாதார மந்திரி ஹர்சவர்தன் பதிலளித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘பேஷன் என்ற பெயரில் இளைஞர்கள் புதியதொரு போதைக்கு அடையாவதை தடுக்க வேண்டியது அவசியமாகும். புகையிலை பொருட்கள் மீதான தடைகளில் குறைபாடு இருப்பதற்காக புதியதொரு போதை அறிமுகமாவதை ஏற்க முடியாது’ என்று கூறினார்.

பின்னர் இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. இதற்கு ஆளும் கட்சியினர் மட்டுமின்றி, எதிர்க்கட்சிகளை சேர்ந்த பல உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

இ-சிகரெட்டுகள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டு சிறையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்க இந்த மசோதா வகை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News