செய்திகள்
திருப்தி தேசாய்

சபரிமலைக்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்ற திருப்தி தேசாய்

Published On 2019-11-27 06:30 GMT   |   Update On 2019-11-27 06:30 GMT
மீண்டும் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்வேன் என்று ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற பெண் உரிமை ஆர்வலர் திருப்தி தேசாய் கூறினார்.
திருவனந்தபுரம்:

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. குறிப்பாக 10 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை.

சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்வது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டு உள்ளது. அதே சமயம் சபரிமலையில் வயது வித்தியாசம் இன்றி பெண்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்று கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது.

தற்போது சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டு உள்ளது. இதனால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதேசமயம் சபரிமலைக்கு வரும் இளம்பெண்களை போலீசார் அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வருகிறார்கள்.

இந்த நிலையில் புனேயை சேர்ந்த பெண் ஆர்வலரான திருப்திதேசாய் தலைமையில் 5 பெண்கள் நேற்று விமானம் மூலம் கொச்சி வந்தனர். கொச்சியில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்ற திருப்திதேசாய் தான் சபரிமலை செல்ல விரும்புவதாகவும், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அவருக்கு ஆதரவாக கடந்த ஆண்டு போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு சென்ற பிந்துவும் வந்திருந்தார். இந்த தகவல் கிடைத்ததும் போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு ஐயப்ப பக்தர்கள் திரண்டு சரணகோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பிந்து மீது இந்து அமைப்பை சேர்ந்த ஸ்ரீநாத் பத்மநாபன் என்பவர் மிளகாய் பொடி ஸ்பிரே அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை போலீசார் கைது செய்தனர்.

நேற்று இரவு 8.30 மணி வரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திருப்தி தேசாய் பிடிவாதமாக அமர்ந்திருந்தார். தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாவிட்டால் அதை எழுத்துப்பூர்வமாக எழுதி தரும்படி அவர் போலீசாரிடம் ஆவேசமாக பேசினார். ஆனால் போலீசார் அதற்கு மறுத்துவிட்டதுடன் அவரை திரும்பிச் செல்லும்படி அறிவுரை வழங்கினர்.

இதைத்தொடர்ந்து இரவு 10 மணியளவில் திருப்திதேசாய் தலைமையிலான பெண்கள் அங்கிருந்து புறப்பட்டு கொச்சி விமான நிலையத்திற்கு சென்றனர். நள்ளிரவு 12.30 மணியளவில் விமானம் மூலம் அவர்கள் புனே புறப்பட்டுச் சென்றனர்.



முன்னதாக கொச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்த திருப்தி தேசாய் கூறியதாவது:-

சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்ய பாதுகாப்பு வழங்கும்படி போலீசாரிடம் கேட்டுக்கொண்டோம். ஆனால் போலீசார் பாதுகாப்பு வழங்க முடியாது என்று கூறி எங்களை திருப்பி அனுப்பிவிட்டனர். சபரிமலைக்கு நாங்கள் சென்றால் பாதுகாப்பு பிரச்சினை ஏற்படும் என்றும், நாங்கள் தாக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் போலீசார் கூறினார்கள்.

இதன்மூலம் சபரிமலையில் அசாதாரணமான சூழ்நிலை ஏற்படும் என்றும், அப்போது பாதுகாப்பு வழங்குவதில் சிரமம் ஏற்படும் என்று கூறி எங்கள் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர்.

நான் இதுபோன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் பயப்படமாட்டேன். மீண்டும் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்வேன். விரைவில் நானும் மற்ற இளம்பெண்களும் சபரிமலைக்கு திரும்பி வருவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News