செய்திகள்
சட்டசபையில் அமர்ந்திருக்கும் புதிய எம்.எல்.ஏ.க்கள்

மகாராஷ்டிரா தேர்தலில் வெற்றி பெற்ற புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு

Published On 2019-11-27 03:32 GMT   |   Update On 2019-11-27 03:32 GMT
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
மும்பை:

288 உறுப்பினர்கள் கொண்ட மகாராஷ்டிர சட்டசபைக்கு கடந்த மாதம் 21-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 24ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 

ஆளுங்கட்சியாக இருந்த பாஜக 105 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன, தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்றன.  எந்த கட்சியாலும் ஆட்சியமைக்க முடியாத நிலையில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 

பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைத்தது. இந்த அரசு நவம்பர் 27-ம் தேதி (இன்று) பெரும்பான்மையை நிரூபிக்கும்படி உச்ச  நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. காலையில் எம்எல்ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு மாலை 5 மணிக்குள் பாஜக அரசு பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என கூறியது.

ஆனால், பாஜகவுக்கு போதிய பெரும்பான்மை இல்லாததால் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள விரும்பவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்ட சில மணி நேரங்களில் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசும், துணை முதல் மந்திரி அஜித் பவாரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். 

அதன்பின்னர் மகாராஷ்டிரா மாநில சட்டசபையின் இடைக்கால சபாநாயகராக பாஜகவை சேர்ந்த காளிதாஸ் கோலம்ப்கர் தேர்வு செய்யப்பட்டார். ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, புதன்கிழமை (நவ.27) காலை 8 மணிக்கு மகாராஷ்டிரா சட்டசபை கூடும் என அறிவிக்கப்பட்டது.



அதன்படி இன்று காலை சட்டசபை கூடியது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி தொடங்கியது. எம்எல்ஏக்களுக்கு இடைக்கால சபாநாயகர் காளிதாஸ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

பதவியை ராஜினாமா செய்த தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் மற்றும் பிருத்விராஜ் சவுகான் உள்ளிட்டோர் எம்எல்ஏக்களாக பதவியேற்றனர். தேர்தல் முடிந்து ஒரு மாதம் கடந்த நிலையில் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்றுள்ளனர். 
Tags:    

Similar News