செய்திகள்
அம்பேத்கர் சிலையின் முன்னர் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்

அரசியலமைப்பின் மதிப்பை பேணிக்காப்போம்: அம்பேத்கர் சிலையின் முன்னர் சோனியா சூளுரை

Published On 2019-11-26 09:24 GMT   |   Update On 2019-11-26 09:24 GMT
அரசியலமைப்பு தினமான இன்று ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் பாராளுமன்ற உரையை புறக்கணித்த காங்கிரஸ் எம்.பி.க்கள் அம்பேத்கர் சிலையின் முன்னர் சூளுரை ஏற்றனர்.
புதுடெல்லி:

இந்திய நாட்டின் அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் மாதம் 26-ம் தேதி ஆண்டுதோறும் அரசியலமைப்பு சட்ட தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அவ்வகையில், 70-வது அரசியலமைப்பு சட்ட தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பாராளுமன்ற இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் பங்கேற்று பேசினார்.

இந்த கூட்டத்தை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, ராஷ்டரிய ஜனதாதளம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் புறக்கணித்தனர்.



மகாராஷ்டிரா அரசியல் நிலவரத்தை மையப்படுத்தி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பாபா சாகேப் அம்பேத்கர் சிலையின் முன்னர் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரையை சோனியா காந்தி வாசிக்க, 'அரசியலமைப்பின் மதிப்பை பேணிக்காப்போம். அதிகாரத்துக்காக கண்மூடித்தனமாக நடக்கும் சர்வாதிகார ஆட்சியிடம் இருந்து நமது நாட்டின் அரசியலமப்பு சட்டத்தின் ஆன்மாவை பாதுகாப்போம்’ என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் சூளுரை ஏற்றனர்.
Tags:    

Similar News