செய்திகள்
தாக்கப்பட்ட பிறகு பேட்டி அளித்த பிந்து

பிந்து மீது மிளகாய்ப் பொடி ஸ்பிரே வீசிய இந்து அமைப்பு நிர்வாகி கைது

Published On 2019-11-26 03:50 GMT   |   Update On 2019-11-26 10:00 GMT
சபரிமலை செல்வதற்கு புறப்பட்ட பிந்து மீது மிளகாய்ப் பொடி ஸ்பிரே தாக்குதல் நடத்திய இந்து அமைப்பு நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:

சபரிமலை செல்வதற்காக கொச்சி வந்த திருப்திதேசாயை விமான நிலையத்தில் இருந்து கேரளாவைச் சேர்ந்த பெண் ஆர்வலர் பிந்து, கொச்சி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். திருப்திதேசாய் அலுவலகத்திற்குள் சென்று விட பிந்து, அலுவலக வளாகத்தில் நின்று கொண்டிருந்தார். இந்த தகவல் அறிந்து அங்கு இந்து அமைப்பினர் மற்றும் ஐயப்ப பக்தர்கள் திரண்டனர்.

அவர்களில் ஒருவர் பிந்துவின் அருகில் திடீரென சென்றார். கையில் மறைத்து வைத்திருந்த மிளகாய்பொடி ஸ்பிரேயை பிந்துவின் முகத்தில் பீய்ச்சி அடித்தார். இதில் பிந்து நிலைகுலைந்தார். அவர் தன் மீது மிளகாய் பொடி ஸ்பிரே அடித்தவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சத்தம் கேட்டு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் கமி‌ஷனர் அலுவலக வளாகத்தில் நின்ற பக்தர்களையும், இந்து அமைப்பினரையும் வெளியேற்றினர்.

இந்த சம்பவங்கள் சமூக ஊடகங்களில் வெளியானது. அதில் பிந்துவின் மீது மிளகாய் பொடி ஸ்பிரே அடிப்பவரின் உருவமும், பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் பிந்து மீது மிளகாய் பொடி ஸ்பிரே அடித்த இந்து அமைப்பு பிரமுகரை கைது செய்தனர். அவரது பெயர் ஸ்ரீநாத்பத்மநாபன். அவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதற்கிடையே மிளகாய்பொடி ஸ்பிரே அடித்ததால் பாதிக்கப்பட்ட பிந்துவை போலீசார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

Tags:    

Similar News