செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

குற்றப்பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் நிற்க தடை வருமா? தேர்தல் கமிஷன் முடிவு எடுக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2019-11-26 01:12 GMT   |   Update On 2019-11-26 01:12 GMT
குற்றப்பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் நிற்க தடை விதிப்பது குறித்து தேர்தல் கமிஷன் முடிவு எடுக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட்டில், பா.ஜனதா பிரமுகரும், வக்கீலுமான அஸ்வினி உபாத்யாயா ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் அரசியல் குற்றமயமாக்கல் அதிகரித்து வருகிறது. 24 சதவீத எம்.பி.க்கள் மீது குற்றவியல் வழக்குகள் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், 7 ஆயிரத்து 810 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் 1,158 பேர் தங்கள் மீது குற்றவியல் வழக்குகள் இருப்பதாக அறிவித்துள்ளனர். 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 8 ஆயிரத்து 163 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் 1,398 வேட்பாளர்கள் தங்கள் மீது குற்றவியல் வழக்குகள் இருப்பதாக அறிவித்தனர்.



எனவே, கடுமையான குற்றங்களில் ஈடுபட்டவர்களை தேர்தலில் நிறுத்தக்கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதி பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-

மனுதாரரின் கோரிக்கையை தேர்தல் கமிஷன் பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறோம். 3 மாதங்களுக்குள் இதுகுறித்து நியாயமான உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News