செய்திகள்
நவாப் மாலிக்

தவறை உணர்ந்து பட்னாவிஸ் பதவி விலக வேண்டும்-தேசியவாத காங். தலைவர் வலியுறுத்தல்

Published On 2019-11-25 05:04 GMT   |   Update On 2019-11-25 05:04 GMT
மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்றுள்ள பட்னாவிஸ் தவறை உணர்ந்து ராஜினாமா செய்ய வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் வலியுறுத்தி உள்ளார்.
மும்பை:

மகாராஷ்டிர மாநிலத்தில்  சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அரசு அமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டசபை கட்சி தலைவர் அஜித் பவார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர். இதனால் தேசியவாத காங்கிரசில் பிளவு ஏற்பட்டுள்ளது. 

அஜித் பவாரின் முடிவு கட்சியின் முடிவு அல்ல என்றும், பாஜகவுடன் கூட்டணி அமைக்கவில்லை என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் உடனடியாக உடனடியாக விளக்கம் அளித்தார். அத்துடன் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ்  கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ‘ரிட்’ வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. குதிரை பேரம் நடக்கலாம் என்பதால், எம்எல்ஏக்களை பாதுகாத்து தக்க வைப்பதில் மூன்று கட்சிகளும் கவனமாக உள்ளன.

இந்நிலையில், அஜித் பவாருக்கு ஆதரவு அளித்ததாக கூறப்படும் 4 எம்எல்ஏக்களில் 2 பேர் டெல்லியில் இருந்து மும்பைக்கு திரும்பி உள்ளனர். அவர்கள் சரத்பவார் அணிக்கு திரும்ப உள்ளதாக தெரிகிறது.  

இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் கூறியதாவது:-

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 53 எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர். மேலும் ஒருவர் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார். எங்கள் கூட்டணிக்கு மொத்தம் 165 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது.

தனக்கு மெஜாரிட்டி இல்லை என்பதை தேவேந்திர பட்னாவிஸ் உணர வேண்டும். தவறு செய்துவிட்டதை அவர் உணர்ந்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.  ராஜினாமா செய்யாவிட்டால், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் நிச்சயம் தோற்கடிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News