செய்திகள்
அஜித் பவார்

அஜித் பவார் மீது நடவடிக்கை: தேசியவாத காங்கிரசின் புதிய சட்டமன்றக் குழு தலைவர் இன்று மாலை தேர்வு

Published On 2019-11-23 08:12 GMT   |   Update On 2019-11-23 08:12 GMT
தேசியவாத காங்கிரசின் சட்டமன்றக் குழு தலைவர் அஜித் பவார், கட்சிக்கு எதிராக செயல்பட்டதையடுத்து புதிய சட்டமன்றக் குழு தலைவர் இன்று மாலை தேர்வு செய்யப்பட உள்ளதாக சரத் பவார் கூறினார்.
  • மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக பாஜக- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. 
  • அஜித் பவாரின் நடவடிக்கையால் கட்சி மேலிடம் கடும் அதிருப்தி. 
  • அஜித் பவார் அளித்த ஆதரவு கடிதம் பற்றி ஆளுநரிடம் ஆலோசனை நடத்த உள்ளதாக சரத் பவார் தகவல்


மும்பை:

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், இன்று காலை திடீர் திருப்பம் ஏற்பட்டது. பாஜக- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். 

இந்த பரபரப்பான சூழ்நிலையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் கூறியதாவது:-

தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அஜித் பவார் முடிவு எடுத்துவிட்டார். எம்எல்ஏக்களை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து சென்றிருக்கிறார். அவரது செயல் ஒழுங்கீனமானது. விசாரணைக்குப் பயந்து அவர் இப்படி செய்தாரா? எனத் தெரியவில்லை.

கட்சி விதிகளின் படி அஜித் பவார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியின் புதிய சட்டமன்றக் குழு தலைவர் இன்று மாலை 4 மணிக்கு தேர்வு செய்யப்படுவார். 

அரசியல் கட்சிகளிடம், எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட கடிதம் இருக்கும். அதேபோன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் என்ற வகையில், அனைத்து எம்எல்ஏக்களும் கையெழுத்திட்ட கடிதம் அஜித் பவாரிடம் இருந்தது. அந்த கடிதத்தை அவர் கொடுத்திருக்கலாம் என நினைக்கிறேன். இதை உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் அப்படி நடந்திருக்கலாம் என எனக்கு சந்தேகம் உள்ளது. இதுபற்றி ஆளுநரிடம் ஆலோசனை நடத்த உள்ளோம்.

அஜித் பவாருடன் 10 அல்லது 11 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆளுநர் மாளிகைக்கு சென்றதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்களில் 3 பேர் இப்போது இங்கே உள்ளனர். 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News