செய்திகள்
கோப்பு படம்

கர்ப்பிணி பெண்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க மக்களவை சபாநாயகர் யோசனை

Published On 2019-11-22 14:21 GMT   |   Update On 2019-11-22 14:21 GMT
கர்ப்பிணி பெண்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க நாடு தழுவிய அளவில் சமச்சீரான உணவு முறை பட்டியலை தயார் செய்யுங்கள் என மக்களவை சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவையில் இன்று பெண்களின் ஊட்டச்சத்து தொடர்பாக விவாதம் நடைபெற்றது. 

கேள்வி நேரத்தின் போது பேசிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிர்தி இரானி, 'ஊட்டச்சத்து குறைபாடு என்பது ஏழை, பழங்குடியினர் இருக்கும் பகுதிகளில் மட்டுமே உள்ளது போன்ற பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. 

ஆனால், நிதி ஆயோக் அமைப்பின் சமீபத்திய புள்ளி விவரங்களின்படி, நாட்டில் மொத்தம் உள்ள மக்கள் தொகையில் 9 சதவிகிதம் பேர் மட்டுமே சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவை பெறுகின்றனர். எனவே, ஊட்டச்சத்து குறைபாடு என்பது நாடு முழுவது நிலவி வரும் பிரச்சனை’ என தெரிவித்தார்.



மத்திய மந்திரி தெரிவித்த தகவல்களையடுத்து மக்களவையில் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, 'நாட்டில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு நிலவிவரும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் விதமாக அந்தந்த பகுதியில் வாழும் மக்களின் பகுதி சார்ந்த சமச்சீரான உணவு முறைகளின் அடிப்படையில் ஊட்டச்சத்து பட்டியலை மந்திரி ஸ்மிர்தி இராணி உருவாக்க வேண்டும். 

இந்த பட்டியலை தயாரித்து ஒவ்வொரு எம்.பி.க்களுக்கும் வழங்க வேண்டும். அதை அவர்கள் தங்களது தொகுதிகளில் உள்ள மக்களுக்கு தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத வேண்டும். 

இப்படி நாம் அனைவரும் ஒன்றினைந்து இந்த விழிப்புணர்வு முயற்சியை மேற்கொண்டால் இன்னும் 5 ஆண்டுகளுக்குள் நாட்டில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு நிலவிவரும் ஊட்டச்சத்து குறைபாடு களையப்படும் என நம்புகிறேன்’ என தெரிவித்தார்.
Tags:    

Similar News