செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்

பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2019-11-22 08:06 GMT   |   Update On 2019-11-22 08:06 GMT
தேர்தல் பத்திரங்களில் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தி பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி: 

மத்தியில் பாரதீய ஜனதா கட்சி, கடந்த மே மாத இறுதியில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. புதிய  ஆட்சியில் முதல் பாராளுமன்ற கூட்டத்தொடரின் இறுதியில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, ‘முத்தலாக்’ தடை மசோதா உள்ளிட்ட  பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.  

இதையடுத்து, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஒரே நாடு ஒரே மொழி  திட்டம், முக்கிய தலைவர்களின் வாட்ஸ்-அப் தகவல்கள் உளவு பார்த்த விவகாரம் போன்றவற்றிற்கு மத்திய அரசு சார்பில் விளக்கம்  அளிக்கப்பட்டது. அசாமில் உள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் தயாரிக்கப்படும் என  உள்துறை மந்திரி அமித் ஷா மாநிலங்களவையில் தெரிவித்தார். 

இந்நிலையில், தேர்தல் பத்திரங்களில் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தி பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பிக்கள் இன்று  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

தேர்தல் பத்திர விவகாரத்தில் மத்திய அரசு பொய்களின் தொழிற்சாலையாக உள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம்  கலைக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்பிக்கள் தெரிவித்தனர். 

தேர்தல் பத்திர விதிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியும், தேர்தல் ஆணையமும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவை மோடி  அரசாங்கத்தால் முறியடிக்கப்பட்டதாக வந்த செய்தியைத் தொடர்ந்து தேர்தல் பத்திர விவகாரம் ஒரு அரசியல் பிரச்சினையாக  உருவெடுத்துள்ளது. 

மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ஆதீர் ரஞ்சன் சவுத்ரி, ஆனந்த்  சர்மா, சஷி தரூர் மற்றும் மணீஷ் திவாரி உள்ளிட்ட பல மூத்த காங்கிரஸ் தலைவர்கள் இந்த விவகாரத்தை எழுப்பி உள்ளனர். 

சட்டவிரோத சாளரத்தில் விற்கப்பட்ட காலாவதியான தேர்தல் பத்திரங்களை எஸ்பிஐ ஏற்றுக் கொள்ளும்படி அரசு செய்ததாகக் கூறிய  ஒரு ஊடக அறிக்கையை மேற்கோளிட்டு, மத்திய அரசு ‘பொய்களின் தொழிற்சாலை’ என்று காங்கிரசின் தலைமை செய்தித்  தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா டுவிட்டரில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News