செய்திகள்
சபரிமலை ஐயப்பன் கோவில்

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பயங்கரவாதிகள் மிரட்டல் - உளவுத்துறை எச்சரிக்கை

Published On 2019-11-22 07:01 GMT   |   Update On 2019-11-22 07:01 GMT
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பயங்கரவாத மிரட்டல் இருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலையடுத்து பாதுகாப்பும் கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாக்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள்.

இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை விழா கடந்த 17-ந்தேதி தொடங்கியது. முதல் நாளிலேயே 50 ஆயிரத் திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்குச் சென்று ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

மண்டல, மகர விளக்கு திருவிழாக்களுக்கு 8 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பயங்கரவாத மிரட்டல் இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது பற்றி உளவுத்துறையினர் மாநில டி.ஜி.பி.க்கு தகவல் தெரிவித்தனர். உளவுத்துறை அளித்துள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-

சபரிமலையில் நடந்து வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த விழாவை சீர்குலைக்க சில பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.

அவர்கள் மாறுவேடத்தில் கோவிலுக்குள் நுழைந்து அசம்பாவிதங்களை ஏற்படுத்தலாம். எனவே கோவிலின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை உயர் போலீஸ் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

மாநில உளவுத்துறையினர் அளித்த தகவலையடுத்து கேரள டி.ஜி.பி. அலுவலகம், மத்திய உளவுத்துறையின் உதவியை கோரியுள்ளது. சபரிமலையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டுள்ள பயங்கரவாத கும்பல்களின் நடமாட்டம், அவர்களின் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றை கண்டறிந்து, தகவல் தரும்படி கேட்டுள்ளது. மேலும் அண்டை மாநில போலீசாருக்கும், கேரளாவில் இருந்து தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதில் அவரவர் மாநிலங்களில் செயல்படும் பயங்கரவாத கும்பல், அவர்களில் யாராவது, சபரிமலை கோவிலில் பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிட்டுள்ளார்களா? என்பதை கண்டறிந்து தகவல் தரும்படியும், கூறியுள்ளனர்.

இது போல கேரள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து கேரளாவின் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் அவரவர் மாவட்டங்களில் சந்தேகப்படும் நபர்கள், பயங்கரவாத அமைப்புகளுடன் ரகசிய தொடர்பில் இருப்பவர்கள், குறித்த விபரங்களை உடனடியாக சேகரிக்க வேண்டும். அவர்களின் நடமாட்டத்தை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநிலத்தின் அனைத்து கடற்கரைகளையும் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். கடல் வழியாக பயங்கரவாதிகள் யாரும் ஊடுருவி விடாமல் இருக்க முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்.

வெடிபொருட்கள், வெடி மருந்துகள் போன்றவை வைத்திருப்போரை கண்காணிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளை உஷார்படுத்திய டி.ஜி.பி. அலுவலகம், சபரிமலையிலும் பாதுகாப்பை அதிகரித்துள்ளது. இதற்காக நிலக்கலில் இருந்து பம்பை வரை கூடுதல் போலீஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்படுகிறது.

மேலும் சன்னிதானத்தில் 15 இடங்களில் மெட்டல் டிடெக்டர்கள் அமைக்கப்படுகிறது. 18-ம் படியேறும் பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

பெருவழி பாதையில் சபரிமலை செல்லும் வயது முதிர்ந்த பக்தர்கள் டோலியில் தூக்கிச் செல்லப்படுவார்கள். டோலி தூக்கும் நபர்களையும், போலீசார் கண்காணிக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

சபரிமலையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஆண்டுதோறும் சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களின் போது உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். இந்த ஆண்டு பயங்கரவாத மிரட்டல் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பும், கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பினரும் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். பாதுகாப்பில் எந்தவித குளறுபடியும் ஏற்படக்கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகப்படும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.



சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம், என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சபரிமலையில் கடந்த ஆண்டு போராட்டங்கள் நடந்தன.

இந்த ஆண்டு இளம்பெண்கள் சபரிமலை செல்ல பாதுகாப்பு தர மாட்டோம் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால் மண்டல பூஜை விழா சுமூகமாக நடந்து வருகிறது. இந்த நேரத்தில் பயங்கரவாத மிரட்டல் இருப்பதாக வெளியான தகவல், பக்தர்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News