செய்திகள்
கோப்பு படம்

காஷ்மீரில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்பது தவறான குற்றச்சாட்டு: மத்திய அரசு

Published On 2019-11-21 14:09 GMT   |   Update On 2019-11-21 14:09 GMT
காஷ்மீரில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்பது பொருத்தமற்ற மற்றும் தவறான குற்றச்சாட்டு என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கிவந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அப்பகுதிகளை மத்திய அரசு தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது.

அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தொலைபேசி, இணைய தள சேவைகள் ரத்து செய்யப்பட்டு ராணுவம் குவிக்கப்பட்டது. மேலும், காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரிகள் ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரிவினைவாத தலைவர்களை வீட்டுச்சிறையில் வைத்தது. 

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 100-க்கு மேலான நிலையில் தற்போது இயல்பு நிலைக்கு மெல்ல திரும்பி வருகிறது. ரெயில் சேவைகள், தொலைபேசி சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், காஷ்மீரில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு என்ன நடக்கிறது என்பது குறித்து மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பல்வேறு நபர்கள், சமூக ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி என்.வி. ரமணா தலைமையினான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. 

இந்த மனுவுக்கு மத்திய, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட அரசு வழக்கறிஞர் சோலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:-

ஜம்மு-காஷ்மீரில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என மனுதாரர்கள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை மட்டுமின்றி பொருத்தமற்றவை. 



மத்திய அரசால் கொண்டுவரப்பட்டு நாடு முழுவதும் நடைமுறையில் இருந்த தகவலறியும் உரிமைச்சட்டம், குழந்தை திருமண தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பல சட்டங்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலமாக இருந்தபோது அமல்படுத்தப்படாமல் இருந்துள்ளது. 

ஆனால் தற்போது ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதையடுத்து அங்கு மத்திய அரசின் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளது. 

போஸ்ட் பேய்ட் தொலைதொடர்பு சேவைகள் கடந்த அக்டோபர் 14-ம் தேதி முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட தருணத்திலும் 917 பள்ளிகள் ஜம்மு-காஷ்மீரில் மூடப்படாமல் செயல்பட்டுக்கொண்டுதான் இருந்தன. 

தங்கள் சொந்த முடிவில் செய்திகளை வெளியிடக்கூடாது என முடிவெடுத்திருக்கும் ஸ்ரீநகரில் பதிப்பாகி வெளிவரும் ‘காஷ்மீர் டைம்ஸ்’ என்ற செய்தித்தாளை தவிர, அனைத்து செய்தித்தாள்களும் ஜம்மு-காஷ்மீரில் வெளியாகிக் கொண்டுதான் இருக்கிறது. 

காஷ்மீரில் கட்டுப்பாடுகள் விதிக்கவும், விதித்த கட்டுப்பாடுகளை தளர்த்தவும் அங்குள்ள அதிகாரிகள் தங்கள் அறிவை பயன்படுத்தியே முடிவுகளை எடுக்கின்றனர் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.   

இரு தரப்பு வாதத்திற்கு பின்னர் கருத்து தெரிவித்த நீதிபதிகள், ’மனுதாரர்களால் எழுப்பப்பட்டுள்ள் அனைத்து கேள்விகளுக்கும் அரசு தரப்பு பதிலளிக்க வேண்டும்.

 நீங்கள் தற்போது தாக்கல் செய்துள்ள பதில் அறிக்கை எங்களை ஒரு முடிவுக்கு வர உதவி செய்யவில்லை. இந்த மனுவிற்கு உரிய முக்கியத்துவம் அளிக்காதது போன்ற தோற்றத்தை அரசு தரப்பு உருவாக்க வேண்டாம்’ என தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News