செய்திகள்
சித்தராமையா

இடைத்தேர்தலில் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களை தோற்கடிப்பதே எங்கள் நோக்கம்: சித்தராமையா

Published On 2019-11-21 01:55 GMT   |   Update On 2019-11-21 01:55 GMT
கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களை தோற்கடிப்பது ஒன்றே காங்கிரஸ்- ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் ஒரே குறிக்கோள் என்று சித்தராமையா பரபரப்பு பேட்டி அளித்தார்.
மைசூரு :

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு வருகிற டிசம்பர் 5-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

இடைத்தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி கவிழ்வதற்கு காரணமாக இருந்த தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைந்து அந்த கட்சி சார்பில் போட்டியிடுகிறார்கள்.

இந்த நிலையில் முன்னாள் முதல்-மந்திரியும், கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

காங்கிரசில் நான் தனிமை படுத்தப்பட்டு உள்ளதாக முதல்-மந்திரி எடியூரப்பா அடிக்கடி கூறி வருகிறார். அவருக்கு நான் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் அவரது இந்த ஆசை நிறைவேறாது. காங்கிரஸ் எனக்கு ஆதரவாக உள்ளது. கட்சி தலைவர்களும் என்னை ஆதரிக்கிறார்கள். ஏமாற்றத்தில் இருக்கும் எடியூரப்பா இவ்வாறு பேசுகிறார். பிற கட்சிகளின் தலைவர்கள் என்னை இலக்காக கொண்டு பேசுகிறார்கள். தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களுக்கும் நானே இலக்கு.

ஏனென்றால் என்னை பார்த்து அவர்கள் பயப்படுகிறார்கள் என்று நான் கருதுகிறேன். பா.ஜனதாவினருக்கு கலாசாரம் என்பது இல்லை. அவர்கள் பாசிச குணம் கொண்டவர்கள். பா.ஜனதாவினர் பொய்யை உண்மையாகவும், உண்மையை பொய்யாகவும் பேசுகிறார்கள். இடைத்தேர்தலில் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களை தோற்கடிக்க வேண்டும் என்பதே எங்களின் முதல் குறிக்கோள்.



ஒரு கட்சியில் இருந்து எம்.எல்.ஏ.வாகி, துரோகம் செய்துவிட்டு பின்னர் இன்னொரு கட்சிக்கு சென்றவர்களுக்கு இந்த இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். வரும் காலங்களில் மக்கள் பிரதிநிதிகள் யாரும் கட்சி தாவக்கூடாது என்ற செய்தியை இந்த தேர்தல் மூலம் மக்கள் வழங்குவார்கள். கூட்டணி அரசு கவிழ இந்த தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களே காரணம். அதனால் அவர்கள் எக்காரணம் கொண்டும் வெற்றி பெறக்கூடாது.

காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் பாதை வேறு. ஆனால் இரு கட்சிகளின் நோக்கம் ஒன்றே. தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை தோற்கடிப்பதே எங்களின் நோக்கம் ஆகும். மந்திரி ஸ்ரீராமுலு மிக மிக பிரபலமான தலைவர். அவருடன் என்னால் போட்டிபோட முடியாது. இடைத்தேர்தல் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மாநில அரசு கைவிட்டுவிட்டது. அந்த மக்கள் இன்று கண்ணீரில் தவிக்கிறார்கள்.

மத்திய அரசிடம் இருந்து நிதி உதவியை பெறுவதில் எடியூரப்பா தோல்வி அடைந்துவிட்டார். மாநில அரசுக்கு பொறுப்பு இல்லை. நான் இன்று (அதாவது நேற்று) முதல் இடைத்தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளேன். இந்த தேர்தலில் 15 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும். மராட்டிய மாநிலத்தில் கட்சி தாவியவர்கள் தோல்வி அடைந்தனர். அதேபோல் கர்நாடகத்திலும் கட்சி தாவல் மூலம் சென்றுள்ள தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் தோல்வி அடைவார்கள்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

அதைத்தொடர்ந்து அவர் உன்சூரில் பிரசாரம் செய்து வாக்குகளை சேகரித்தார். அப்போது அவர் காங்கிரஸ் நிர்வாகி ஒருவரின் வீட்டில் நாட்டுக்கோழி குழம்புடன் மதிய உணவு சாப்பிட்டார். இந்த பிரசாரத்தில் பேசிய சித்தராமையா, “கர்நாடகத்தில் யாரும் பசியுடன் உறங்க செல்லக் கூடாது. ஏழை மக்கள் அனைவரும் உணவு சாப்பிட வேண்டும். இதற்காக நான் மீண்டும் முதல்-மந்திரியானால் ரேஷன் கடைகளில் 10 கிலோ அரிசியை இலவசமாக வழங்குவேன்” என்றார்.
Tags:    

Similar News