செய்திகள்
பிரிதிவிராஜ் சவான்

மகாராஷ்டிராவில் விரைவில் நிலையான ஆட்சி - காங்கிரஸ்

Published On 2019-11-20 17:15 GMT   |   Update On 2019-11-20 17:15 GMT
மகாராஷ்டிராவில் விரைவில் நிலையான ஆட்சி அமையும் என்று சரத் பவாரை சந்தித்த பின் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரிதிவிராஜ் சவான் தெரிவித்துள்ளார்.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவு தனிப்பெரும்பான்மை இல்லாததால், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட சிவசேனா,  காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இன்று பிரதமர் மோடியை சந்தித்தது, மகாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா தலைவர்களுடன் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இன்று மாலை சந்தித்தனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரிதிவிராஜ் சவான் கூறுகையில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இடையே நீண்ட நேரம்  நேர்மறையான விவாதங்கள் நடைபெற்றன.  ஆலோசனை தொடர்ந்து நடைபெறும். மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சியை விரைவில் எங்களால் கொடுக்க முடியும் என்பதை உறுதியாக நம்புகிறேன் என தெரிவித்தார்.
Tags:    

Similar News