செய்திகள்
ஹெல்மெட்

மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து செல்வோரும் ஹெல்மெட் அணிய உத்தரவு

Published On 2019-11-20 08:46 GMT   |   Update On 2019-11-20 08:46 GMT
கேரளாவில் டிசம்பர் 1-ந்தேதி முதல் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணிப்போரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டம் அமலுக்கு வருகிறது.
திருவனந்தபுரம்:

இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாநில அரசுகளும் இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது. கேரளாவில் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கேரள அரசு ஐகோர்ட்டில் முறையிட்டது. இந்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. மேலும் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனக்கூறி விட்டது.

ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கேரளாவில் டிசம்பர் 1-ந்தேதி முதல் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணிப்போரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டம் அமலுக்கு வருகிறது.



இதனை கேரள போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இனி இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்துதான் பயணம் செய்ய வேண்டும். இல்லையேல் அபராதம் செலுத்த வேண்டும்.

இந்த உத்தரவுப்படி மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்பவர்களில் 4 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் இந்த விதிமுறை பொருந்தும் என்று கேரள அரசு அறிவித்து உள்ளது.

இதுபற்றிய உத்தரவுகள் போக்குவரத்து போலீசாருக்கும், போக்குவரத்து அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. கேரள போக்குவரத்து மந்திரி கூறும்போது, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து இருப்பவர்கள் வருகிற 1-ந்தேதி முதல் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். அதே சமயம் இந்த சட்டத்தை அமல்படுத்த கடுமையான கெடுபிடிகள் எதுவும் காட்டப்படமாட்டாது என்றார்.


Tags:    

Similar News