செய்திகள்
வெங்காயம்

விலையை கட்டுப்படுத்த ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி

Published On 2019-11-20 03:27 GMT   |   Update On 2019-11-20 03:27 GMT
வெங்காயம் விலையை கட்டுப்படுத்த ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய தனியார் வியாபாரிகள் ‘ஆர்டர்’ கொடுத்துள்ளனர்.
புதுடெல்லி:

வெங்காயம் அதிகமாக விளையும் மாநிலங்களில் கனமழை பெய்ததால், வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. வெங்காயம் வரத்து குறைந்ததால், அதன் விலை அதிகரித்துள்ளது. சில்லரை கடைகளில் கிலோ ரூ.80 வரை விற்கப்படுகிறது.

வெங்காயம் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை, வியாபாரிகள் இருப்பு வைக்க கட்டுப்பாடு, தனது கையிருப்பில் உள்ள வெங்காயத்தை மானிய விலையில் விற்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

மேலும், வெங்காயம் இறக்குமதி செய்வதற்கு தனியார் வியாபாரிகளுக்கும், அரசு வாணிப நிறுவனங்களுக்கும் அதிகாரம் அளித்துள்ளது. இறக்குமதிக்கான விதிமுறைகளையும் தளர்த்தி உள்ளது.

இதை பயன்படுத்தி, வியாபாரிகள், வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய ‘ஆர்டர்’ கொடுத்துள்ளனர். இத்தகவலை மத்திய நுகர்வோர் அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



“சிறிய அளவில் வெங்காயம் இறக்குமதி செய்துள்ளதாக வியாபாரிகள் எங்களிடம் தெரிவித்தனர். மேலும், ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய ‘ஆர்டர்’ கொடுத்துள்ளதாகவும், அந்த வெங்காயம் இம்மாத இறுதியில் வந்து சேரும் என்றும் அவர்கள் கூறினர். அடுத்த மாதத்துக்கு இன்னும் நிறைய வெங்காயம் வாங்க உள்ளனர். இதன் மூலம் விலை குறைய வாய்ப்புள்ளது” என்று அவர் கூறினார்.

மேலும், அரசு வாணிப நிறுவனங்கள் மூலம் ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Tags:    

Similar News