செய்திகள்
கோப்பு படம்

இந்தியாவில் பருவமழை காரணமாக 2,391 பேர் உயிரிழப்பு - மக்களவையில் மந்திரி தகவல்

Published On 2019-11-19 13:48 GMT   |   Update On 2019-11-19 13:48 GMT
இந்தியாவில் 2019-ம் ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களில் சிக்கி மொத்தம் 2,391 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதற்கிடையில், இன்று நடைபெற்ற கூட்டத்தில் நாட்டில் நிலவிவரும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பான விவாதங்களை மக்களவையில் எதிர்க்கட்சிகளை சார்ந்த உறுப்பினர்கள் எழுப்பினர். 

அப்போது, இந்த ஆண்டு நாட்டில் பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது.



இந்த கேள்விக்கு பதிலளித்த மத்திய மந்திரி நித்யானந்த் ராய், 'மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் இருந்து சேகரித்த தகவல்களின் அடிப்படையில் நாடு முழுவதும் பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு, மின்னல் போன்ற இயற்கை பேரிடர்களில் சிக்கி மொத்தம் 2,391 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 15,729 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 

இந்த இயற்கை பேரிடர் காரணமாக 8 லட்சத்து 67 வீடுகள் மற்றும் 63 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன. மேலும், இந்த பேரிடரில் சிக்கித் தவித்த 98,962 பேரை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். நாடு முழுவதும் பருவமழை சார்ந்த சம்பவங்களில் 23,869 பேர் மருத்துவ உதவி பெற்றுள்ளனர்’ என தெரிவித்தார்.

Tags:    

Similar News