செய்திகள்
சோனியா காந்தி மற்றும் சரத்பவார் (கோப்பு படம்)

சோனியா-சரத்பவார் சந்திப்பு: மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சியமைப்பதில் இழுபறி

Published On 2019-11-18 15:46 GMT   |   Update On 2019-11-18 15:46 GMT
மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சியமைப்பது தொடர்பாக சோனியா காந்தியுடன் நடைபெற்ற சந்திப்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என சரத்பவார் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

மகாராஷ்டிரா மாநிலத்தில் தனித்து ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் இல்லாததால் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது.

இதற்கிடையில், மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்து கூட்டணி அரசு அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பின்போது அனைவரும் ஏற்கும் வகையிலான குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டம் தொடர்பான வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த அறிக்கை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா காந்தியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் டெல்லியில் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். 



இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரத்பவார் கூறுகையில், 'மகாராஷ்டிராவில் நிலவும் அரசியல் சூழல் குறித்து விரிவாக ஆலோசித்தோம். இந்த சந்திப்பின் போது ஏகே அந்தோணியும் உடன் இருந்தார்’ என தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் முடிவுக்கு எதிரான கருத்தில் சோனியா காந்தி உள்ளாரா? என்ற நிரூபரின் கேள்விக்கு பதிலளித்த சரத் பவார், 'எங்கள் சந்திப்பின்போது ஆட்சி அமைப்பது தொடர்பான எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி விவகாரங்கள் தொடர்பாக மட்டுமே பேசினோம்’ என்றார்.   
Tags:    

Similar News