செய்திகள்
ஆதரவாளர்களுடன் கோத்தபய ராஜபக்சே

இலங்கையின் புதிய அதிபராகும் கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2019-11-17 08:17 GMT   |   Update On 2019-11-17 08:17 GMT
இலங்கை அதிபர் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று விரைவில் பதவியேற்கவுள்ள கோத்தபய ராஜபக்சேவின் வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இலங்கையில் நேற்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற ஒரு கோடியே 59 இலட்சத்து 92 ஆயிரத்து 96 பேரில் சுமார் 80 சதவீதம் மக்கள் வாக்களித்திருந்தனர்.

நேற்றிரவு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே சகோதரரும், ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனா கட்சியின் வேட்பாளருமான கோத்தபய ராஜபக்சே 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றிமுகம் காட்டி வருகிறார்.

இந்நிலையில், இலங்கை அதிபர் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று விரைவில் பதவியேற்கவுள்ள கோத்தபய ராஜபக்சேவின் வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.



இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ’அதிபர் தேர்தலில் தாங்கள் பெற்றுள்ள வெற்றிக்கு நல்வாழ்த்துக்கள்! நமது இருநாடுகள், நாடுகளின் மக்களுடனான தொடர்புகள் மேலும் வலுப்பெறும் வகையிலும், நமது பிராந்தியத்தில் அமைதி, வளம், பாதுகாப்பு ஆகியவை மேம்படும் வகையிலும் உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்.

மேலும், இந்த தேர்தலை வெற்றிகரமாக நடத்திய இலங்கை மக்களை பாராட்டுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் வாழ்த்துச் செய்திக்கு உடனடியாக கோத்தபய ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார்.

’என்னை வாழ்த்தியமைக்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நமது இருநாடுகளும் வரலாறு, பொது நம்பிக்கை ஆகியவற்றால் பிணைந்துள்ளது.

நமது நட்புறவை பலப்படுத்து விரைவில் உங்களை சந்திக்கவும் காத்திருக்கிறேன்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் கோத்தபய ராஜபக்சே பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News