செய்திகள்
மகாத்மா காந்தி

காந்தி விபத்தில் இறந்தாரா?: ஒடிசாவில் சர்ச்சையை கிளப்பும் அரசுப் பள்ளி கைப்பிரதி

Published On 2019-11-15 09:02 GMT   |   Update On 2019-11-15 11:22 GMT
மகாத்மா காந்தி ஜனவரி மாதம் 30-ம் தேதி டெல்லி பிர்லா இல்லத்தில் விபத்துசார்ந்த காரணங்களால் மரணத்தை சந்தித்ததாக ஒடிசா அரசுப் பள்ளி கைப்பிரதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புவனேஸ்வர்:

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் நாடு முழுவதும் மத்திய-மாநில அரசுகளின் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மகாத்மா காந்தியின் போதனைகள் மற்றும் அவருக்கும் ஒடிசா மாநிலத்துக்கும் இருந்த தொடர்பு ஆகியவற்றை மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில் இங்குள்ள அரசுப் பள்ளிகளில் ‘நமது தேசப்பிதா: ஒரு பார்வை’ என்ற தலைப்பில் அம்மாநில பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் இரண்டு பக்கங்களை கொண்ட ஒரு கைப்பிரதி வெளியிடப்பட்டது.

அரசுப் பள்ளிகள் மற்றும் அரசின் நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவ-மாணவியர்களுக்கு வழங்கப்பட்ட அந்த கைப்பிரதிகளில் '1948-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ம் தேதி டெல்லி பிர்லா இல்லத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக விபத்துசார்ந்த காரணங்களால் மகாத்மா காந்தி மரணத்தை சந்தித்தார்’ என்று அச்சிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பான தகவல்கள் வெளியானதும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.



இப்படிப்பட்ட மாபெரும் வரலாற்று பிழைக்கு பொறுப்பேற்று முதல் மந்திரி நவீன் பட்நாயக் உடனடியாக ராஜினாமா செய்வதுடன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவும் வேண்டும் என ஒடிசா மாநில முன்னாள் மந்திரியும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவருமான நரசிங்க மிஸ்ரா வலியுறுத்தியுள்ளார்.

இந்த கைப்பிரதியை தயாரித்தவர்களை இப்படி எழுதும் வகையில் கோட்சேவின் அனுதாபிகள் தூண்டி இருக்கலாம். காந்தி மரணம் தொடர்பான உண்மையான தகவல்களுடன் மாற்று கைப்பிரதிகளை அச்சிட்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலரான பிரபுல்லா சமந்தாரா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட இந்த கைப்பிரதிகளை திரும்பப்பெறும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இவ்விவகாரத்தை அரசு மிகவும் தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை மந்திரி சமிர் ரஞ்சன் தாஸ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News