செய்திகள்
வசீம் ரிஸ்வி

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஷியா வக்பு வாரிய தலைவர் நன்கொடை

Published On 2019-11-14 11:01 GMT   |   Update On 2019-11-14 11:01 GMT
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு நன்கொடை வழங்க உள்ளதாக ஷியா மத்திய வக்பு வாரிய தலைவர் அறிவித்துள்ளார்.
லக்னோ:

நெடுங்காலமாக சர்ச்சையில் இருந்த அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியது. அயோத்தியில் பிரச்சினைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம், அதற்கான அறக்கட்டளை 3 மாதங்களுக்குள் உருவாக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதேசமயம், அங்கிருந்த மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதமானது, மசூதி கட்ட வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்படவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர். இதையடுத்து ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என இந்து அமைப்புகள் தெரிவித்தன. ராமர் கோவில் கட்டுவதற்கு பக்தர்களும் சில மத அமைப்புகளும்  நன்கொடை அளிப்பதாக கூறியுள்ளனர்.

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி குணால் கிசோர் தலைமையிலான பாட்னா மகாவீர் டிரஸ்ட், ராமர் கோவில் கட்ட 10 கோடி ரூபாய் வழங்க உள்ளதாக அறிவித்தது.

இந்நிலையில், ராமர் கோயில் கட்டுவதற்கு ரூ.51,000 நன்கொடை அளிப்பதாக உத்தரபிரதேச ஷியா மத்திய வக்பு வாரிய தலைவர் வசீம் ரிஸ்வி அறிவித்துள்ளார். அவரது திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் இந்த நன்கொடையை வழங்க உள்ளார்.

இதுபற்றி வசீம் ரிஸ்வி கூறுகையில், ‘வசீம் ரிஸ்வி பிலிம்ஸ் நிறுவனத்தின் இந்த நன்கொடையானது, ஷியா மத்திய வக்பு வாரிய உறுப்பினர் அஷ்பக் உசேன் ஜியா மூலமாக, ராமஜென்மபூமி நியாஸின் மஹந்த் ராகேஷ் தாஸிடம் வழங்கப்படும்’ என்றார்.

இதேபோல் கடந்த ஆண்டு அயோத்திக்கு சென்றபோது, ராமர் கோயில் கட்டுவதற்காக வசீம் ரிஸ்வி ரூ.10,000 நன்கொடை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News