செய்திகள்
பாஜகவில் இணைந்த எம்எல்ஏக்கள்

கர்நாடக இடைத்தேர்தல் - பாஜகவில் இணைந்த தகுதிநீக்க எம்எல்ஏக்கள் 13 பேர் போட்டி

Published On 2019-11-14 10:44 GMT   |   Update On 2019-11-14 10:44 GMT
கர்நாடகாவில் பா.ஜ.க.வில் இணைந்த தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 13 பேருக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: 

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியின்போது, கொறடா உத்தரவை மீறியதாக இரு கட்சிகளையும் சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் இதற்கான உத்தரவை பிறப்பித்தார். மேலும் அவர்கள் 17 பேரும் 2023 வரை தேர்தல்களில் போட்டியிடவும் தடை விதித்தார். 

இதில் 14 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். 3 பேர் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்தவர்கள். சபாநாயகரின் தகுதிநீக்க உத்தரவை எதிர்த்து 17 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். 

இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட், எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும் என தீர்ப்பளித்தது. அதேசமயம் அவர்கள் 17 பேரும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் எனவும் அனுமதி அளித்தது. 



இதற்கிடையே, தகுதிநீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏ.க்கள் முதல் மந்திரி எடியூரப்பா முன்னிலையில் இன்று பா.ஜ.க.வில் இணைந்தனர். 

சட்டசபையில் காலியாக உள்ள 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு டிசம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பா.ஜ.க.வில் இணைந்த தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 13 பேருக்கு கர்நாடகா இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என பாஜக அறிவித்துள்ளது. 
Tags:    

Similar News