அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள வேல்ஸ் இளவரசர் சார்லஸ் தனது 71வது பிறந்தநாளை பள்ளிக் குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
மும்பையில் பள்ளிக் குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய பிரிட்டிஷ் இளவரசர்
பதிவு: நவம்பர் 14, 2019 13:51
பள்ளிக்குழந்தைகளுடன் இளவரசர் சார்லஸ்
மும்பை:
வேல்ஸ் இளவரசர் சார்லஸ் 2 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று டெல்லி வந்த அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
டெல்லியில் உள்ள குருத்வாராவிற்கு சென்று சீக்கிய வழிபாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளவரசர் சார்லஸ், முன்னதாக இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகளுடன் பருவநிலை மாற்றம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இளவரசர் சார்லஸ் தனது 71வது பிறந்த நாளை இந்தியாவில் கொண்டாட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நவம்பர் 14ம் தேதியான இன்று தனது 71 வது பிறந்தநாளை மும்பையில் உள்ள தாஜ் ஓட்டலில் குழந்தைகளுடன் குதூகலமாக கொண்டாடி மகிழ்ந்தார். ஓட்டல் அறையில் குழந்தைகள் அவரை சூழ்ந்து நிற்க, இளவரசர் கேக் வெட்டி மகிழ்ந்தார். குழந்தைகள் அனைவரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, தாஜ் ஓட்டலில் இன்று நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில், நிலையான சந்தை நிலவரத்தை கண்டடைவதற்கான ஆலோசனை மற்றும் வழிமுறைகளை குறித்து இந்தியாவின் முன்னணி வர்த்தகர்களுடன் இளவரசர் சார்லஸ் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.