செய்திகள்
தேவேந்திர பட்னாவிஸ்

முதல்-மந்திரி பதவியை 5 ஆண்டுகள் பூர்த்தி செய்தவர் பட்னாவிஸ்

Published On 2019-11-14 02:07 GMT   |   Update On 2019-11-14 02:07 GMT
மகாராஷ்டிராவில் வசந்த்ராவ் நாயக்கிற்கு அடுத்து முதல்-மந்திரி பதவியை 5 ஆண்டுகள் பூர்த்தி செய்தவர் என்ற பெருமையை தேவேந்திர பட்னாவிஸ் பெற்றுள்ளார்.
மும்பை :

மகாராஷ்டிரா மாநிலம் 1960-ம் ஆண்டு உருவானதை தொடர்ந்து, இதுவரை 18 பேர் முதல்-மந்திரி பதவி வகித்து உள்ளனர். இதில் முதலாவது முதல்-மந்திரி என்ற பெருமையை பெற்றவர், யஷ்வந்த் ராவ் சவான்.

மராட்டிய அரசியலில் தற்போது நடைபெற்ற குழப்பம் புதிது அல்ல. பல முறை அரசியல் குழப்பங்கள் காரணமாக முதல்-மந்திரிகள் அவ்வப்போது மாற்றப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக பல முதல்-மந்திரிகள் ஓராண்டு, 2 ஆண்டுகள் மட்டுமே தங்களது பதவியை தக்க வைக்க முடிந்தது.

ஆனால் காங்கிரஸ் தலைவரான வசந்த்ராவ் நாயக் 11 ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி வகித்தார். இதில் 1967 முதல் 1972 வரை அவர் தனது 5 ஆண்டு ஆட்சியை முழுமையாக பூர்த்தி செய்தார். அவருக்கு அடுத்ததாக பாரதீய ஜனதாவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிசால் தான் 5 ஆண்டு பதவியை பூர்த்தி செய்ய முடிந்துள்ளது. இதனால் 5 ஆண்டுகள் பூர்த்தி செய்த 2-வது முதல்-மந்திரி என்ற பெயரை தேவேந்திர பட்னாவிஸ் பெற்றுள்ளார்.



நடந்து முடிந்த சட்டசபை தேர்தலை தொடர்ந்து, 2-வது முறையாக தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரி பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிவசேனாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் கடந்த 8-ந் தேதி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அப்போது மாற்று ஏற்பாடு செய்யும் வரை பதவியில் நீடிக்குமாறு அவரை கவர்னர் கேட்டுக்கொண்டார். இதனால் அவர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் வலைதள பக்கத்தில், பெயருக்கு முன்பு ‘கேர்டெக்கிங் சீப் மினிஸ்டர்' (காபந்து முதல்-மந்திரி) என்று குறிப்பிட்டார்.

நேற்றுமுன்தினம் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அவர் டுவிட்டர் பக்கத்தில் தனது பெயருக்கு முன்னால் ‘மகாராஷ்டிராஸ் சேவக்' (மராட்டியத்தின் சேவகன்) என மாற்றிக்கொண்டார்.
Tags:    

Similar News