செய்திகள்
வருமானவரி

அடுத்த பட்ஜெட்டில் வருமானவரி விகிதத்தை மாற்றி அமைக்க மத்திய அரசு பரிசீலனை

Published On 2019-11-13 23:20 GMT   |   Update On 2019-11-13 23:20 GMT
அடுத்த பட்ஜெட்டில் வருமானவரி விகிதத்தை மாற்றி அமைப்பது குறித்து தொழில், வர்த்தக அமைப்புகளிடம் மத்திய நிதி அமைச்சகம் யோசனை கேட்டுள்ளது.
புதுடெல்லி:

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தனது முதலாவது மத்திய பட்ஜெட்டை கடந்த ஜூலை 5-ந் தேதி தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்ற ஒரு மாதத்தில், பொருளாதார மந்தநிலையில் இருந்து நாட்டை மீட்பதற்காக பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.

உள்நாட்டு நிறுவனங்களுக்கான கம்பெனி வரியை 8 சதவீதம் குறைத்தார். புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கும் சலுகை அளித்தார். மொத்தம் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடி மதிப்புள்ள சலுகைகளை வழங்கினார்.

இதனால், தனிநபர் வருமானவரி விகிதத்தையும் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

வருகிற 2020-2021 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-ந் தேதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அதையொட்டி, பல்வேறு துறை பிரதிநிதிகளுடன் பட்ஜெட் தொடர்பான கலந்தாலோசனை கூட்டங்களை மத்திய நிதி அமைச்சகம் வழக்கம்போல் நடத்தி வருகிறது.

அதே சமயத்தில், மத்திய நிதி அமைச்சகத்துக்கு உட்பட்ட வருவாய்த்துறை, தனிநபர் வருமானவரி, கம்பெனிகளுக்கான வருமானவரி மற்றும் சுங்கவரி, உற்பத்தி வரி போன்ற மறைமுக வரி விகிதங்களை மாற்றி அமைப்பது தொடர்பாக யோசனை கேட்டுள்ளது. இதுபோன்று யோசனை கேட்பது இதுவே முதல்முறை ஆகும்.

இதுதொடர்பாக தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகளுக்கு கடந்த 11-ந் தேதி வருவாய்த்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வருமானவரி மற்றும் மறைமுக வரிகளில், வரி கட்டமைப்பு, வரிவிகிதம் ஆகியவற்றில் மாற்றம் செய்வது பற்றியும், வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் தாங்கள் யோசனைகள் தெரிவிக்க வேண்டும். அந்த யோசனைகளை நியாயப்படுத்தக்கூடிய ஆதாரங்கள், புள்ளிவிவரங்கள், வருவாயில் ஏற்படும் தாக்கம் ஆகியவற்றையும் இணைத்து அனுப்ப வேண்டும். எந்த ஆதாரமும், புள்ளிவிவரமும் இல்லாத யோசனைகளை பரிசீலிக்க முடியாது.

நேரடி வரிகள் குறித்த யோசனைகளை அனுப்பும்போது, சமீபத்தில் கம்பெனி வரி குறைக்கப்பட்டதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஜி.எஸ்.டி. (சரக்கு-சேவை வரி) தொடர்பான வேண்டுகோள்களை இந்த பட்ஜெட் ஆலோசனை கூட்டங்களில் நாங்கள் எடுத்துக்கொள்ள மாட்டோம். சுங்கவரி, உற்பத்தி வரி தொடர்பான ஆலோசனைகளை அனுப்பலாம். நவம்பர் 21-ந் தேதிக்குள் உங்கள் யோசனைகளை அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News