செய்திகள்
மகாராஷ்டிரா சட்டசபை

3-வது முறையாக ஜனாதிபதி ஆட்சியை சந்தித்த மகாராஷ்டிரா

Published On 2019-11-13 03:59 GMT   |   Update On 2019-11-13 03:59 GMT
அரசியல் கட்சிகள் ஆட்சி அமைக்க தவறியதை அடுத்து மகாராஷ்டிரா 3வது முறையாக ஜனாதிபதி ஆட்சியை சந்திக்கிறது.
மும்பை:

மகாராஷ்டிராவில் அரசியல் கட்சிகள் ஆட்சி அமைக்க தவறியதை அடுத்து, நேற்று அதிரடியாக ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்த மாநிலம் ஜனாதிபதி ஆட்சியை சந்திப்பது என்பது இது முதல் முறையல்ல. 1960-ம் ஆண்டு மே 1-ந் தேதி உருவான மகாராஷ்டிரா தனது 59 ஆண்டுகால வரலாற்றில் ஏற்கனவே இரண்டு முறை ஜனாதிபதி ஆட்சியை கண்டு இருக்கிறது.

1978-ம் ஆண்டு வசந்த் தத்தா தலைமையில் அமைந்த காங்கிரஸ் அரசாங்கத்தை கவிழ்த்து விட்டு முற்போக்கு ஜனநாயக முன்னணியை தோற்றுவித்து சரத்பவார் ஆட்சிக்கு வந்தார். 1980-ம் ஆண்டு மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்த இந்திரா காந்தி சரத்பவார் தலைமையிலான முற்போக்கு ஜனநாயக முன்னணி அரசை அதிரடியாக டிஸ்மிஸ் செய்தார். அப்போது தான் மகாராஷ்டிராவில் முதல் முறையாக ஜனாதிபதி ஆட்சி அறிமுகம் செய்யப்பட்டது.

இதற்கு பிறகு 34 ஆண்டுகளுக்கு பின்னர் 2014-ம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதி ஆட்சி அமலானது. பிரிதிவிராஜ் சவான் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட மோதல் காரணமாக சரத்பவார் ஆதரவை விலக்கி கொண்டார். இதனால் அரசு கவிழ்ந்து மீண்டும் இங்கு ஜனாதிபதி ஆட்சி அமலானது.

தற்போது, ஆட்சி அமைக்க பெரும்பான்மை பெற்றிருந்த போதும், முதல்-மந்திரி பதவியை பங்கிட்டு கொள்வதில் பாரதிய ஜனதா, சிவசேனா கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட குடுமிபிடி சண்டையால் 5 வருடத்தில் மீண்டும் ஜனாதிபதி ஆட்சிக்கு மகாராஷ்டிரா தள்ளப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News