செய்திகள்
சஞ்சய் ராவத்தை பா.ஜனதா முன்னாள் மந்திரி ஆஷிஸ் செலார் சந்தித்து உடல்நலம் விசாரித்த போது எடுத்தபடம்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சஞ்சய் ராவத்துடன் சரத்பவார், உத்தவ் தாக்கரே சந்திப்பு

Published On 2019-11-13 01:46 GMT   |   Update On 2019-11-13 01:46 GMT
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தை சரத்பவார், உத்தவ் தாக்கரே மற்றும் பாரதீய ஜனதா தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர்.
மும்பை

சிவசேனா எம்.பி.யும், அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா'வின் நிர்வாக ஆசிரியருமான 57 வயது சஞ்சய் ராவத்துக்கு அரசியல் பரபரப்புக்கு மத்தியில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதயத்தில் 2 இடங்களில் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, ஆஞ்சியோபிளாஸ்டி (இதய அடைப்பு நீக்கம்) சிகிச்சை செய்யப்பட்டது.

ஆட்சி அமைக்கும் பிரச்சினையில் சிவசேனாவுக்கு முதல்-மந்திரி பதவி கேட்டு பாரதீய ஜனதாவுடன் நேரடி மோதலில் ஈடுபட்டு, அரசியலில் நடந்த அடுத்தடுத்து திருப்பங்களுக்கு காரணமானவர் என்று அறியப்படும் இவர் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையை முடித்து ஆஸ்பத்திரியில் ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆஸ்பத்திரியில் சஞ்சய் ராவத்தை சந்தித்து நலம் விசாரித்தார். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, பாரதீய ஜனதா மூத்த தலைவர்கள் ஹர்ஷ்வர்தன் பாட்டீல், ஆஷிஸ் செலார் ஆகியோரும் சஞ்சய் ராவத்தை சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.

பின்னர் நிருபர்களை சந்தித்த உத்தவ் தாக்கரே, “சஞ்சய் ராவத் வேகமாக குணமடைந்து வருகிறார். அரசியல் குறித்து தற்போது எதுவும் பேச முடியாது. விஷயங்கள் வடிவம் பெறுகின்றன. அதுகுறித்து உரிய நேரத்தில் பேசுவேன்” என்றார்.

ஆஷிஸ் செலார் கூறுகையில், சஞ்சய் ராவத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். இது மராட்டியத்தின் கலாசாரம். இதில் அரசியல் இல்லை, என்றார்.

Tags:    

Similar News