செய்திகள்
விபத்தில் பலியான ராகுல்-சவுமியா

அரசு அதிகாரி தம்பதி கார் விபத்தில் பலி - பெற்றோரை இழந்து 2 வயது குழந்தை தவிப்பு

Published On 2019-11-12 10:35 GMT   |   Update On 2019-11-12 10:35 GMT
களியக்காவிளை அருகே கார் விபத்தில் அரசு அதிகாரி தம்பதி பலியான சம்பவத்தில் பெற்றோரை இழந்த 2 வயது குழந்தை தவித்துக் கொண்டிருந்தது பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
திருவனந்தபுரம்:

களியக்காவிளை அருகே உள்ள கேரள எல்லைப் பகுதியான நெய்யாற்றின் கரை ஊராட்டுக்காலாவை சேர்ந்தவர் ராகுல் (வயது 28). இவரது மனைவி சவுமியா (24).

திருவனந்தபுரம் அருகே காஞ்சிரங்குளம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ராகுல் அதிகாரியாக பணியாற்றி வந்தார். கொல்லம் அருகே அஞ்சல் பஞ்சாயத்தில் சவுமியா அதிகாரியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த தம்பதிக்கு இஷானியா என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. திருவனந்தபுரம் அருகே உள்ள மையநாடு என்ற இடத்தில் இவர்களது உறவினர் ஒருவரின் திருமணம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை ராகுலும், சவுமியாவும் காரில் புறப்பட்டுச் சென்றனர். தங்களது குழந்தையை பெற்றோரிடம் விட்டுவிட்டு அவர்கள் சென்றனர்.

நெய்யாற்றின்கரை அருகே கடவாட்டுக்கோணம் என்ற இடத்தில் அவர்களது கார் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த கேரள அரசு பஸ்சும், காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் காரின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது. காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி ராகுலும், சவுமியாவும் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார்கள். இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும், பொதுமக்கள் அங்கு திரண்டனர். காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய ராகுல், சவுமியா உடலை மீட்க போராடியும் முடியாததால் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் அங்கு சென்று கணவன், மனைவி உடலை மீட்டு அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

பிரேத பரிசோதனைக்கு பிறகு ராகுல், சவுமியா உடல் அவர்களது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவர்களது உடலைப் பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர்.

விபத்தில் தாய், தந்தையை பறிகொடுத்த 2 வயது குழந்தை இஷானியா நடந்தது என்ன என்பதைக் கூட அறியாமல் தவித்துக் கொண்டிருந்தது பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Tags:    

Similar News