செய்திகள்
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே

கூடுதல் அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு- உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா வழக்கு

Published On 2019-11-12 10:16 GMT   |   Update On 2019-11-12 10:55 GMT
மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதற்கு தேவையான எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் அளிப்பதற்கு ஆளுநர் கூடுதல் அவகாசம் வழங்காததை எதிர்த்து சிவசேனா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மும்பை:

மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி, ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றும் சிவசேனாவின் அதிரடி நிபந்தனைகளால் ஆட்சியமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. தனிபெரும் கட்சி என்ற முறையில் முதலில் பாஜகவை ஆட்சியமைக்க வரும்படி ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆனால், பாஜக ஆட்சியமைக்கப் போவதில்லை என கூறிவிட்டது. 

இதையடுத்து இரண்டாவது பெரிய கட்சி என்ற அடிப்படையில் சிவசேனாவுக்கு அழைப்பு விடுத்த ஆளுநர், எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை வழங்க அவகாசம் வழங்கினார். ஆனால், அந்த காலக்கெடுவுக்குள் சிவசேனாவால் எம்எல்ஏக்கள் கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதத்தை வழங்க முடியவில்லை. 

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவு கடிதம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. எனவே, கூடுதல் அவகாசம் அளிக்கும்படி சிவசேனா கோரிக்கை விடுத்தது. ஆனால் அவகாசம் அளிக்க மறுத்த ஆளுநர், மூன்றாவது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸ் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். இன்று இரவுக்குள் எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை வழங்கும்படி தேசியவாத காங்கிரசுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் சிவசேனா கட்சி கடும் அதிருப்தி அடைந்தது. அத்துடன், ஆளுநரின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. சிவசேனா தரப்பில் வழக்கறிஞர் சுனில் பெர்னாண்டஸ் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News