செய்திகள்
சஞ்சய் ராவத்

மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைய பாடுபட்டு வந்த சஞ்சய் ராவத் ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2019-11-11 11:13 GMT   |   Update On 2019-11-11 11:13 GMT
மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க தீவிரமாக செயல்பட்டு வந்த சஞ்சய் ராவத் நெஞ்சு வலியால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மும்பை:

மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க வேண்டும். உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரேவை முதல் மந்திரி பதவியில் அமர்த்த வேண்டும் என தீவிரமாக செயல்பட்டு வந்தவர்களில் முக்கியமானவர் சஞ்சய் ராவத்.

சிவசேனா சார்பில் பாராளுமன்ற மேல்சபை உறுப்பினராக பதவி வகித்து வரும் சஞ்சய் ராவத், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை திரட்டுவதிலும் அக்கட்சியின் மேலிட தலைவர்களுடன் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதிலும் முக்கிய பங்காற்றி வந்தார்.



இந்நிலையில், இன்று பிற்பகல் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை உத்தவ் தாக்கரே மற்றும் சஞ்சய் ராவத் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், இன்று பிற்பகல் 3.30 மணியளவில் சஞ்சய் ராவத் லேசான நெஞ்சு வலியால் மும்பையில் உள்ள லீலாவதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது சகோதரரும் சிவசேனாவை சேர்ந்த மகாராஷ்டிரா எம்.எல்.ஏ.வுமான சுனில் ராவத் தெரிவித்துள்ளார்.

நெஞ்சு வலி தொடர்பாக இரு நாட்களுக்கு முன்னர் சஞ்சய் ராவத் இங்கு சிகிச்சை பெற வந்ததாகவும்
அவருக்கு செய்யப்பட்ட சில பரிசோதனைகளில் ‘இ.சி.ஜி.’ முடிவுகளின் அடிப்படையில் அவர் லீலாவதி ஆஸ்பத்திரியில் இன்று உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் டாக்டர்கள் குறிப்பிட்டனர்.

சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘சாமனா’ பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராகவும் சஞ்சய் ராவத் பொறுப்பேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News