செய்திகள்
ராஜினாமா செய்த மத்திய மந்திரி அரவிந்த் சாவந்த்

இனியும் மத்திய அரசில் நீடிப்பது சரியாக இருக்காது- ராஜினாமா செய்த சிவசேனா எம்பி பேட்டி

Published On 2019-11-11 10:18 GMT   |   Update On 2019-11-11 10:18 GMT
இனியும் மத்திய அரசில் நீடிப்பது சரியாக இருக்காது என மந்திரி பதவியை ராஜினாமா செய்த சிவசேனா எம்பி அரவிந்த் சாவந்த் கூறினார்
மும்பை:

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி பெரும்பான்மை பெற்றும், புதிய ஆட்சி அமைப்பதில் குழப்பம் நீடிக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் 50-50 பார்முலா மற்றும் சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்ற கோரிக்கையில் சிவசேனா உறுதியாக இருப்பதால் ஆட்சியமைக்கும் முயற்சியில் முட்டுக்கட்டை தொடர்கிறது.

சிவசேனா ஒத்து வராததால் ஆட்சியமைக்கப் போவதில்லை என பாஜக கூறிவிட்டது. அதனால், மகாராஷ்டிரா தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்ற இரண்டாவது கட்சி (56 இடங்கள்) என்ற வகையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக சிவசேனாவின் விருப்பத்தை அறிவதற்காக ஆளுநர் அழைப்பு விடுத்தார். இன்று மாலை 7.30 மணிக்குள் தங்கள் முடிவை தெரிவிக்கும்படி ஆளுநர் கூறியிருக்கிறார்.

இதையடுத்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் முயற்சியில் சிவசேனா இறங்கி உள்ளது. அத்துடன் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபையில் இருந்தும் சிவசேனா விலகியது. மத்திய மந்திரி சபையில்  கனரக தொழில் மற்றும் பொது நிறுவனங்கள் துறை மந்திரியாக இருந்த, சிவசேனா எம்பி அரவிந்த் சாவந்த் இன்று பதவியை ராஜினாமா செய்தார். 

‘சிவசேனா உண்மையின் பக்கம் நிற்கிறது. பாஜகவின் பொய்யான அரசியல் சூழ்நிலையில் நாங்கள் ஏன் டெல்லி அரசியலில் நீடித்திருக்க வேண்டும்? 

தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளில் இருந்து பாஜக பின்வாங்கி விட்டது. இந்த சூழ்நிலையில் மத்திய அரசில் நீடிப்பது தார்மீக ரீதியாக சரியானதாக இருக்காது. அதனால் நான் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளேன்’ என அரவிந்த் சாவந்த் கூறினார்.

இதற்கிடையே தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சந்தித்து ஆட்சியமைக்க ஆதரவு தரும்படி கேட்டார். கூட்டணி ஆட்சி அமைந்தால் செயல்படுத்தக்கூடிய குறைந்தபட்ச பொது செயல்திட்டம் குறித்தும் ஆலோசித்துள்ளனர். 
Tags:    

Similar News