செய்திகள்
சோனியா காந்தி

மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க காங். ஆதரவு அளிக்குமா? -சோனியா தலைமையில் ஆலோசனை

Published On 2019-11-11 06:13 GMT   |   Update On 2019-11-11 10:21 GMT
மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கலாமா? என்பது குறித்து சோனியா தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
  • சிவசேனாவின் கோரிக்கையை பாஜக ஏற்காததால் மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைப்பதில் முட்டுக்கட்டை.
  •  சிவசேனாவை சமாதானப்படுத்த முடியாத நிலையில், ஆட்சியமைக்கும் முயற்சியில் இருந்து பாஜக விலகியது.
  •  ஆட்சியமைக்க சிவசேனா முயற்சி, ஆதரவு குறித்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆலோசனை.

மும்பை:

மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை இருந்தும் புதிய ஆட்சி அமைப்பதில் குழப்பம் நீடிக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் 50-50 பார்முலா மற்றும் சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்ற கோரிக்கையில் சிவசேனா உறுதியாக இருப்பதால் ஆட்சியமைக்கும் முயற்சியில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. 

எனவே, 105 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க முடியுமா? என அந்த கட்சிக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கடிதம் அனுப்பினார். ஆனால், தற்போதைய சூழலில், ஆட்சியமைக்கப் போவதில்லை என பாஜக கூறிவிட்டது. 

எனவே, மகாராஷ்டிரா தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்ற இரண்டாவது கட்சி (56 இடங்கள்) என்ற வகையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக சிவசேனாவின் விருப்பத்தை அறிவதற்காக ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். 

சிவசேனாவின் சட்டமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஏக்நாத் ஷிண்டே, தமது கட்சிக்கு உள்ள பெரும்பான்மை ஆதரவையும், ஆட்சியமைப்பதற்கான விருப்பத்தையும் இன்றிரவு 7.30 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார். 

இதையடுத்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் முயற்சியில் சிவசேனா இறங்கி உள்ளது. 

ஆனால் சிவசேனா ஆட்சியமைப்பதற்கு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு அளிக்குமா? என்பது உறுதியாக தெரியவில்லை.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று செயற்குழு கூட்டம் நடைபெற்றது. சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் மூத்த தலைவர்கள் அகமது படேல், கே.சி.வேணுகோபால், மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

மகாராஷ்டிர அரசியல் சூழ்நிலை மற்றும் ஆட்சியமைப்பதில் காங்கிரசின் பங்கு குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. சிவசேனா கட்சி ஆட்சியமைப்பதற்கு ஆதரவு தரலாமா? என்பது குறித்து மூத்த தலைவர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது.

இதேபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டம் இன்று மும்பையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பிரபுல் படேல், சுப்ரியா சுலே, அஜித் பவார், ஜெயந்த் பாட்டீல் உள்ளிட்ட பலர் பங்கேற்று ஆலோசனை நடத்த உள்ளனர். 
Tags:    

Similar News