செய்திகள்
அரவிந்த் சாவந்த்

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அரவிந்த் சாவந்த் அறிவிப்பு

Published On 2019-11-11 03:10 GMT   |   Update On 2019-11-11 07:30 GMT
மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக சிவசேனா கட்சியை சேர்ந்த அரவிந்த் சாவந்த் அறிவித்துள்ளார்.
மும்பை:

288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டசபைக்கு நடந்த தேர்தலில் 145 இடங்கள் இருந்தால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜனதா 105, சிவசேனா 56 இடங்கள் என 161 இடங்களில் வெற்றி பெற்றன.

ஆனால் ஆட்சி, அதிகாரம் என அனைத்திலும் 50 சதவீதம் பங்கு தர வேண்டும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பிடிவாதம் பிடித்ததால் மகாராஷ்டிரத்தில் அந்த கூட்டணியால் ஆட்சி அமைக்க இயலவில்லை.

என்ன விலை கொடுத்தாவது சிவசேனாவுக்கு முதல்-மந்திரி பதவியை பெற வேண்டும் என்ற பதவி வெறியுடன் சிவசேனா தலைவர்கள் நடந்து கொண்டனர். இதன் காரணமாக கவர்னர் அழைப்பு விடுத்தும், ஆட்சி அமைக்க விரும்பவில்லை என்று பா.ஜனதா மூத்த தலைவர்கள் அறிவித்தனர்.

இதைத்தொடர்ந்து 2-வது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சி அமைக்க வரும்படி மகாராஷ்டிர கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். சிவசேனா தலைவர்கள் கடந்த சில தினங்களாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

சிவசேனாவை ஆதரிக்க முதலில் காங்கிரஸ் தலைவர் சோனியா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இருவரும் தயங்கினார்கள். சிவசேனாவின் கொள்கை, கோட்பாடுகள் அனைத்தும் காங்கிரசுக்கு 100 சதவீதம் எதிரானவை என்பதால் சோனியா, அந்த கட்சியுடன் கைகோர்க்க தீவிர ஆர்வம் காட்டவில்லை.

ஆனால் மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் சிவசேனாவை ஆதரிக்கலாம் என்று கூறி வந்ததால் சோனியா, திட்டவட்டமான முடிவை வெளியிடாமல் இருந்தார்.

இதற்கிடையே சரத்பவாரை சந்தித்து சிவசேனா கட்சி தலைவர்கள் பேச்சு நடத்தினார்கள். தேசியவாத காங்கிரசுக்கு அமைச்சரவையில் முக்கிய இலாகாகளை விட்டுத் தருவதாக தெரிவித்தனர். இதனால் சரத்பவார் மனதில் மாற்றம் ஏற்பட்டது.



அவர் சிவசேனா கட்சிக்கு ஒரே ஒரு நிபந்தனை மட்டும் விதித்தார். சிவசேனாவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றால், பா.ஜனதாவுடன் உள்ள கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

முதல்-மந்திரி பதவி மீது உள்ள மோகம் காரணமாக நீண்ட நாள் கூட்டணி நண்பனான பா.ஜனதாவை காவு கொடுக்கவும் சிவசேனா தீர்மானித்தது. இன்று (திங்கட்கிழமை) காலை பா.ஜனதாவுடன் உள்ள கூட்டணியை சிவசேனா தாமாக முன் வந்து முறித்துக் கொண்டது.

இதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் இருந்தும் சிவசேனா விலகியது. மத்திய மந்திரி சபையில் சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் கனரக தொழில் மற்றும் பொதுத்துறை மந்திரியாக இருந்து வந்தார். இன்று காலை அவர் மந்திரி பதவியை விட்டு விலகுவதாக டுவிட்டர் மூலம் அறிவித்தார்.

Tags:    

Similar News