செய்திகள்
நாய் குட்டிக்காக போலீசில் தாய் மீது புகார் அளித்த சினேகா, நாய் குட்டி குக்கி.

நாய் குட்டியை வீட்டை விட்டு துரத்திய தாய் மீது போலீசில் புகார் அளித்த மகள்

Published On 2019-11-11 02:45 GMT   |   Update On 2019-11-11 02:45 GMT
நாய் குட்டியை வீட்டை விட்டு துரத்திய தாய் மீது மகளே போலீசில் புகார் அளித்த சம்பவம் மும்பையில் நடந்து உள்ளது.
மும்பை :

மும்பை காட்கோபர் பந்த் நகரை சேர்ந்தவர் சினேகா (வயது24). இவர் கடந்த ஜனவரி மாதம் சாலையில் நாய் குட்டி ஒன்றை பார்த்தார். அதை வீட்டுக்கு எடுத்து வந்து, ‘குக்கி’ என பெயர் சூட்டி ஆசை, ஆசையாக வளர்த்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 6-ந் தேதி அதிகாலை 5.30 மணியளவில் சினேகாவின் தாய் அஸ்வினி அவரை எழுப்பினார். அப்போது அவர், குக்கி இயற்கை உபாதை கழிக்க வீட்டைவிட்டு வெளியே ஓடிவிட்டதாக கூறினார். உடனடியாக தூக்கத்தில் இருந்த எழுந்த சினேகா வெளியே சென்று குக்கியை தேடினார். ஆனால் பல மணி நேரம் தேடியும் குக்கி கிடைக்கவில்லை.

இதையடுத்து சினேகா அடுக்குமாடி குடியிருப்பின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது சினேகாவின் தாய் அதிகாலை 4.15 மணியளவில் நாய் குட்டி குக்கியை தூக்கி சென்று வெளியே விட்டு வரும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதுகுறித்து அவர் தாய் அஸ்வினியிடம் கேட்ட போது அவர் நாயை வெளியே கொண்டு விட்டு துரத்தியதை ஒப்பு கொண்டார். ஆனால் எங்கு விட்டேன் என்பதை சொல்ல மறுத்துவிட்டார். இதனால் அவரால் நாய் குட்டியை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து அவர் நாய் குக்கியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு சன்மானம் வழங்கவும் தயாராக இருந்தார். ஆனால் அவரால் நாயை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து நாய் குட்டியை வீட்டை விட்டு துரத்திய தாய் அஸ்வினி மீது போலீசில் சினேகா புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் விலங்குகளை துன்புறுத்தியதாக அஸ்வினி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ’மகள் அளித்த புகாரின் பேரில் அவரது தாய் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளோம். அவரை விசாரணைக்கு அழைத்து தகவல்களை பெற்று உள்ளோம். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றார்.

ஆசையாக வளா்த்த நாயை துரத்திய தாய் மீது மகளே போலீசில் புகார் அளித்து உள்ள சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News