செய்திகள்
சித்தராமையா, குமாரசாமி, எடியூரப்பா

கர்நாடகத்தில் 15 தொகுதி இடைத்தேர்தல்: வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்

Published On 2019-11-11 02:28 GMT   |   Update On 2019-11-11 02:28 GMT
கர்நாடகத்தில் காலியாக உள்ள 15 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. அதுபோல் தேர்தல் நடத்தை விதிகளும் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
பெங்களூரு :

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. அந்த கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள். இதையடுத்து, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததுடன், முதல்-மந்திரி பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து, முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், பதவியை ராஜினாமா செய்தவர் உள்பட 17 எம்.எல்.ஏ.க்கள் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி, அவர்களை தகுதி நீக்கம் செய்து, அப்போது சபாநாயகராக இருந்த ரமேஷ்குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களும் வருகிற 2023-ம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் கர்நாடகத்தில் 17 தொகுதிகள் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அத்துடன் காலியாக உள்ள 17 தொகுதிகளில், 15 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ராய்ச்சூர் மாவட்டம் மஸ்கி மற்றும் பெங்களூரு ராஜராஜேசுவரிநகர் தொகுதிகளில் கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலின் போது வேட்பாளர்கள் பெற்ற வெற்றியை எதிர்த்து தொடர்ந்த வழக்கு கோர்ட்டில் நடைபெறுவதால், அந்த 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவில்லை.

இந்த நிலையில், இடைத்தேர்தல் நடைபெறும் 15 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதையடுத்து, இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாநில தேர்தலை ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் காலியாக உள்ள மகாலட்சுமி லே-அவுட், கே.ஆர்.புரம், யஷ்வந்தபுரம், சிவாஜிநகர், ஒசகோட்டை, சிக்பள்ளாப்பூர், எல்லாப்பூர், கோகாக், காகவாட், கிரேகெரூர், ராணிபென்னூர், உன்சூர், கே.ஆர்.பேட்டை, அதானி, பல்லாரி மாவட்டம் விஜயநகர் ஆகிய 15 தொகுதிகளுக்கு அடுத்த மாதம்(டிசம்பர்) 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை நாளை(அதாவது இன்று) அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வெளியிடுகிறார்கள். இதையடுத்து, 15 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையே (இன்று)தொடங்கி நடைபெறுகிறது.

வேட்பு மனு தாக்கல் செய்ய வருகிற 18-ந் தேதி கடைசி நாளாகும். மனுக்கள் மீதான பரிசீலனை வருகிற 19-ந் தேதி நடக்கிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெற 21-ந் தேதி கடைசி நாளாகும். டிசம்பர் 5-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. 15 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை டிசம்பர் 9-ந் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் ஒட்டு மொத்தமாக 37,50,565 வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதியானவர்கள் ஆவார்கள். இவற்றில் ஆண்கள் 19,12,791 பேரும், பெண்கள் 18,37,375 பேரும், 3-ம் பாலினத்தினர் 399 பேரும் உள்ளனர்.

இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அதிகபட்சமாக பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் தொகுதியில் 2 லட்சத்து 83 ஆயிரத்து 312 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதியாக எல்லாப்பூர் தொகுதி இருக்கிறது. அங்கு 1 லட்சத்து 72 ஆயிரத்து 399 வாக்காளர்கள் உள்ளனர். 15 தொகுதிகளிலும் 4,185 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. பெங்களூரு யஷ்வந்தபுரம் தொகுதியில் அதிக பட்சமாக 461 வாக்குச்சாவடிகள் உள்ளன.

இடைத்தேர்தலுக்கான பணிகளில் ஒட்டு மொத்தமாக 22 ஆயிரத்து 598 ஊழியர்கள், அதிகாரிகள் ஈடுபட உள்ளனர். அந்த ஊழியர்கள், அதிகாரிகளுக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அக்டோபர் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்தால், அப்போது வேட்பு மனு தாக்கல் செய்திருந்தவர்கள், மீண்டும் மனு தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை. அந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படும்.

தேர்தலின் போது நடைபெறும் முறைகேடுகள் குறித்து 1950 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தாலும், நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தாமல் இருந்தது. இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்குவதால் நடத்தை விதிமுறைகள் நாளையில் (இன்று) இருந்தே அமலுக்கு வருகிறது. இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதியில் உள்ள மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்காது.

தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருப்பதற்கும், அதற்கான தீர்ப்பு வருகிற 13-ந் தேதி கூறப்பட இருப்பதற்கும் தேர்தல் ஆணையத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பந்தப்பட்ட விவகாரம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில், தங்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க் கள் தொடர்ந்த வழக்கில் வருகிற 13-ந் தேதி தீர்ப்பு கூறப்பட உள்ளது. தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் மட்டுமே, இடைத்தேர்தலில் போட்டியிட முடியும். இதனால் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்பார்த்து பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளும், தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களும் காத்திருக்கின்றனர். 
Tags:    

Similar News