செய்திகள்
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா

அயோத்தி வழக்கில் தீர்ப்பு : நாட்டில் அமைதி நிலவ அமித் ஷா எடுத்த நடவடிக்கை - புதிய தகவல்கள்

Published On 2019-11-10 21:46 GMT   |   Update On 2019-11-10 21:46 GMT
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வந்த பின்னர் நாட்டில் அமைதியும், நல்லிணக்கமும் நிலவ அமித் ஷா எடுத்த நடவடிக்கைகள் பற்றி தெரிய வந்துள்ளது.
புதுடெல்லி:

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இரு மதங்களை அடிப்படையாக கொண்ட விவகாரம் என்பதால், தீர்ப்பு என்ன மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தப்போகிறதோ என்ற பரபரப்பு நிலவியது.

அயோத்தியில் 4 ஆயிரம் துணை ராணுவ வீரர்களை மத்திய அரசு குவித்து, நாடு முழுவதும் பாதுகாப்பினை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு தனது தீர்ப்பை வழங்கியது. சர்ச்சைக்குரிய இடம் என கூறப்பட்டு வந்த 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, முஸ்லிம்கள் மசூதி கட்டிக்கொள்ள 5 ஏக்கர் நிலம் ஒதுக்கவும் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பு பெரும்பாலான அரசியல் கட்சிகளாலும், பிற அமைப்புகளாலும் வரவேற்கப்பட்டது.

நாட்டின் எந்தப் பகுதியிலும் ஒரு சிறிய அசம்பாவிதம் கூட நடக்காமல் பெரும் அமைதியும், சமாதானமும் நிலவி வருகிறது.

இந்த அளவுக்கு அமைதியும், சமாதானமும் நிலவ காரணம், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா திட்டமிட்டு எடுத்த நடவடிக்கைகள்தான்.

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகப்போகிறது என தகவல்கள் வெளிவந்ததுமே அமித் ஷா உஷாரானார்.

அவர் பாதுகாப்பு ஏற்பாடுகளில் தனது தனிப்பட்ட கவனத்தை செலுத்த தொடங்கினார். 9-ந் தேதி தீர்ப்பு என்பது 8-ந் தேதி இரவுதான் தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து 9-ந் தேதி தான் கலந்து கொள்ள சம்மதித்திருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் அவர் அதிரடியாக ரத்து செய்தார்.

மாநில முதல்-மந்திரிகள், அதிலும் குறிப்பாக பதற்றமான மாநிலங்களின் முதல்-மந்திரிகளை அவர் தொலைபேசியில் அழைத்து பேசினார். பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தவும், உஷாராக இருக்கவும் தக்க அறிவுரைகளை வழங்கினார்.

பாரதீய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் மட்டுமல்லாது காங்கிரஸ், மாநில கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடன் பேச அவர் தயக்கம் காட்டவில்லை.

எங்காவது விரும்பத்தகாத எந்தவொரு நிகழ்வு நடந்தாலும் உடனே தெரிவிக்க வேண்டும், எல்லாவிதமான உதவிகளையும் மத்திய அரசு உடனடியாக செய்யும் என்ற உறுதியை அளித்தார். அனைத்து தரப்பினரிடமும் நம்பிக்கையை ஏற்படுத்தினார்.

அமித் ஷா வின் பேச்சு, முதல்-மந்திரிகளுக்கு சட்டம், ஒழுங்கை பாதுகாப்பதிலும், விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்காமல் தடுப்பதிலும் துணை நின்றது.

மேலும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை செயலாளர் அஜய் கே. பல்லா, உளவுத்துறை இயக்குனர் அரவிந்த் குமார் ஆகியோரை அமித் ஷா பல முறை நேரில் அழைத்து பேசி, அறிவுறுத்தல்களை வழங்கியபடியே இருந்தார்.

உளவுத்துறை இயக்குனர் அரவிந்த் குமாரிடம் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு நிலவரத்தை அவர் தொடர்ந்து கேட்டறிந்து வந்தார்.

இப்படி அமித் ஷா, நாட்டின் பாதுகாப்பிலும், நல்லிணக்க சூழலிலும் கண்ணும், கருத்துமாக இருந்து எடுத்த நடவடிக்கைகளால்தான் நாட்டில் அமைதியும், நல்லிணக்கமும் நிலவுகிறது என்று உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் பெருமித்ததுடன் தெரிவித்தனர்.
Tags:    

Similar News