செய்திகள்
சஞ்சய் ராவத்

சிவசேனாவை சேர்ந்தவர் தான் மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் - சஞ்சய் ராவத்

Published On 2019-11-10 14:40 GMT   |   Update On 2019-11-10 14:40 GMT
மகாராஷ்டிராவின் அடுத்த முதல் மந்திரியாக பதவியேற்பவர் சிவசேனா கட்சியை சேர்ந்தவராகத்தான் இருப்பார் என சஞ்சய் ராவத் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
மும்பை:

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு போதுமான இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதா-சிவசேனா கூட்டணியில் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்டு உள்ள மோதலால் அங்கு புதிய ஆட்சி அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

சிவசேனாவை சேர்ந்தவர் முதல்-மந்திரி ஆவதற்கு 170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதாக அக்கட்சி பா.ஜனதாவை மிரட்டி வருகிறது.

சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை வென்ற தனிக்கட்சி  பாஜக என்பதால் ஆட்சி அமைக்க தேவேந்திர பட்னாவிஸ்க்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார். மேலும், சட்டசபையில் நவம்பர் 11-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிட்டார்.



இதன்படி, இன்று மாலை தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரை சந்தித்தனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பட்டில் 'மகாராஷ்டிராவில் நாங்கள் ஆட்சி அமைக்கப் போவதில்லை’ என தெரிவித்தார்.

பாஜக-சிவசேனா கூட்டணி இங்கு மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காகதான் மகக்ள் எங்களுக்கு வாக்களித்தனர். ஆனால், பாஜக ஆட்சிக்கு ஆதரவு அளிக்காமல் மக்களின் தீர்ப்பை அவமதிக்கும் வகையில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா நினைத்தால் அந்த முயற்சிக்கு எங்களது நல்வாழ்த்துகள் எனவும் சந்திரகாந்த் பட்டில் குறிப்பிட்டார்.

அவரது இந்த கருத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், மகாராஷ்டிராவின் அடுத்த முதல் மந்திரியாக பதவியேற்பவர் சிவசேனா கட்சியை சேர்ந்தவராகத்தான் இருப்பார் என திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

’சிவசேனாவை சேர்ந்தவர் தான் மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் என எங்கள் கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இன்று உறுதிப்பட, தெளிவாக கூறியுள்ளார். அவர் அப்படி கூறியதால் எப்படியும் எங்கள் கட்சியை சேர்ந்தவர் முதல் மந்திரியாக வருவார்’ எனவும் சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
Tags:    

Similar News