செய்திகள்
எல்.கே.அத்வானி

கசப்புணர்வுகளை புறந்தள்ளிவிட்டு அமைதியை நிலைநாட்டும் நேரம் வந்துள்ளது: அத்வானி

Published On 2019-11-09 15:12 GMT   |   Update On 2019-11-09 15:12 GMT
அயோத்தி நிலம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பை நாட்டு மக்களுடன் இணைந்து முழுமனதுடன் வரவேற்கிறேன் என பாஜக மூத்த தலைவர் அத்வானி குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி:

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் பிரமுகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான ’ராமஜென்ம பூமி’ பிரசார இயக்கத்தை தொடங்கிய அசோக் சிங்காலுக்கு உறுதுணையாக இருந்து ‘கரசேவை’ என்ற யாத்திரையை முன்னெடுத்துச் சென்றவர்களில் முதன்மையானவரும் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி(92) 'சுப்ரீம் கோர்ட் இன்று அளித்துள்ள தீர்ப்பை நாட்டு மக்களுடன் இணைந்து முழுமனதுடன் வரவேற்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.



’அயோத்தி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகளை கொண்ட அமர்வு அளித்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை எனது நாட்டு மக்கள் அனைவருடனும் சேர்ந்து முழுமனதாக வரவேற்கிறேன்.

அயோத்தியில் உள்ள ராமர் அவதரித்த இடத்தில் சிறப்பான முறையில் ராமர் கோவில் கட்டுவதற்கான வழி இந்த ஒருமனதான தீர்ப்பின் மூலம் கிடைத்துள்ளதை எண்ணி மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்திய விடுதலை இயக்கத்துக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய இயக்கமான ராமஜென்ம பூமி இயக்கத்துக்கு எனது பணிவான பங்களிப்பும் இருக்க கடவுள் வாய்ப்பளித்ததை எண்ணி மனநிறைவு கொள்கிறேன்.

நீண்டுக்கொண்டே வந்த கோவில்-மசூதி சர்ச்சை இப்போது முடிவு பெற்றுள்ளது. மற்ற வேற்றுமைகள், கசப்புணர்வுகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு சமூக ஒற்றுமை மற்றும் அமைதியை நிலைநாட்ட வேண்டிய நேரம் வந்துள்ளது’ என அத்வானி குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News