செய்திகள்
மேற்கு வங்கத்தை நெருங்கிய புல்புல் புயல்

புல்புல் புயல் இன்று கரைகடக்கிறது -கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தம்

Published On 2019-11-09 11:47 GMT   |   Update On 2019-11-09 11:47 GMT
புல்புல் புயல் இன்று இரவு மேற்கு வங்கத்தில் கரைகடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தப்பட உள்ளது.
கொல்கத்தா:

வங்கக் கடலில் உருவான ‘புல்புல்’ புயல், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை நோக்கி நகர்ந்து அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை நீடிக்கிறது. மணிக்கு 120 கிமீ வேகத்தில் காற்று வீசுவதால், ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து, ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

இன்று மதிய நிலவரப்படி புல்புல் புயல், மேற்கு வங்கத்தின் திகா நகரின் தெற்கு-தென்கிழக்கில் 90 கிமீ தொலைவிலும், கொல்கத்தாவில் இருந்து 185 கிமீ தொலைவிலும் இருந்தது. இன்று இரவு 8 மணியில் இருந்து 10 மணிக்குள் மேற்கு வங்க கடலோர பகுதிகளில் புயல் கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவின் கடலோர பகுதிகளில் மேலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.



புல்புயல் நெருங்கி வரும் நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொல்கத்தா விமான நிலையத்தில் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை 12 மணி நேரம் விமான சேவைகள் நிறுத்தப்படும் என உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறி உள்ளனர். 
Tags:    

Similar News