செய்திகள்
காங்கிரஸ்

அயோத்தி தீர்ப்பு எதிரொலி - டிச.1ல் காங்கிரஸ் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

Published On 2019-11-09 10:18 GMT   |   Update On 2019-11-09 10:18 GMT
அயோத்தி தீர்ப்பி எதிரொலியாக, பொருளாதார மந்த நிலையை கண்டித்து டிசம்பர் 1-ம் தேதி டெல்லியில் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்தை காங்கிரஸ் கட்சி ஒத்திவைத்துள்ளது.
புதுடெல்லி:

நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாகக் குறைந்தது. உற்பத்தித்துறை கடந்த ஆண்டு முதல் காலாண்டில் 12.1 சதவீதம் இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 0.6 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது.
 
வேளாண் துறையின் வளர்ச்சி 5.1 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகக் குறைந்தது. ரியல் எஸ்டேட் துறை கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 9.6 சதவீதம் இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் 5.7 சதவீதமாக சரிந்தது.

பொருளாதார வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சியும் ஜூலை மாதத்தில் 2.1 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது. கடந்த ஆண்டு இதே ஜூலை மாதத்தில் இந்த 8 துறைகளின் வளர்ச்சி 7.3 சதவீதமாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 2.1 சதவீதம் மட்டுமே இருக்கிறது.

இதற்கிடையே, பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசில் நிலவும் பொருளாதார மந்த நிலையை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் டிசம்பர் 1-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில், அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக தலைநகர் டெல்லியில் டிசம்பர் 1-ம் தேதி நடத்தவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. ஆர்ப்பாட்டம் நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News