செய்திகள்
ராமர்

அயோத்தி நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம்- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Published On 2019-11-09 06:01 GMT   |   Update On 2019-11-09 07:39 GMT
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டு அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பு கூறியது.



இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த அமைப்புகள் உள்ளிட்ட 14 பேர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

‘இந்த வழக்கில் தொல்லியல் துறையின் அறிக்கையை நிராகரிக்க முடியாது. பாபர் மசூதி காலியிடத்தில் கட்டப்படவில்லை. மசூதி கட்டப்பட்ட இடத்தில் கட்டுமானம் இருந்ததை தொல்லியல் துறை உறுதி செய்துள்ளது. ஆங்கிலேயர் வருகைக்கு முன், அந்த இடத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்தி உள்ளனர் என்பது பயணக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. எனவே, சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம். இதற்காக 3 மாதங்களுக்குள் மத்திய அரசு ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும். முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்படவேண்டும்’ என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News